பல முறை கேள்விகளால் துரத்தப்பட்டு இமெயில் வரை வந்து உங்களுக்கு அனுப்பாதது பல  . எழுதி வைத்து இமெயிலுக்கே வராதது என ஏகப்பட்ட கடிதம் . மிகப் பெரும்பாலும் அவைகளுக்கு பதில் இரண்டொரு நாளில் உங்கள் வளைதளத்தில் கேள்வி பதிலாக , கட்டுரையாக வந்துவிடும் அல்லது எனக்கென இருக்கவே இருக்கிறது 26,000 பக்கங்கள் . எனது தேடலுக்கான் விடைகளை இங்கு எங்காவது கண்டடைந்து கொண்டே இருப்தால் அறுபடாத நீண்ட அகப்பயணத்தில் உங்களுடன் இருப்பதாக நினைக்கிறேன் .தங்களின் அஜ்மீர் பயணம் மிக அனுக்கமான ஒன்றை கொடுத்திருந்தது. அதற்கு எப்போதும் என் நெஞ்சம் நெகிழும் நன்றிகள். ஜெ ,அகக் கொந்தளிப்பான நிலையில் உங்களை கோவையில் , நாகர்கோவிலில் சந்தித்த இந்த ஆறு ஏழு வருடங்களில் அடைந்த அகமாற்றம் வார்த்தைகளில் விவரிக்க இயலாதது, மிக மிக அகவயமானது . இன்று எல்லா கொந்தளிப்புகளும் அடங்கிய நிலையில் இருந்து கொண்டிருக்கிறேன். இருந்தும் இந்த கேள்வியை கேட்டேயாக வேண்டும் எனத் தோன்றியதால் இந்தக் கடிதம் .தங்களது சமீபத்திய பதிவு “மதம், மரபு, அரசியல்” அதில் தங்கள் கருத்து வரிக்கு வரி உடன்படுகிறேன் .காரணம் கடந்த 25 வருட காலம் நான் மிக விழைந்து பனியாற்றிய ஒரு துறை . அதில் தங்கள் பதிலில் இப்படி கூறியிருந்தீர்கள்“முற்றிலும் மாற்றமே இல்லாமல் நீடிக்கலாமா? இல்லை, அவ்வண்ணம் நீடிக்கும் எந்த அமைப்பும் பழமைகொண்டு அழியும். மாறும் காலத்தில் தன்னை தக்கவைக்கவே அது மாற்றமில்லாமல் இருக்கவேண்டியிருக்கிறது. அதேசமயம் சில மாற்றங்களைச் செய்துகொள்ளாவிட்டால் அது முழுமையாக அழியநேரிடும். அந்த மாற்றங்களை அது செய்துகொண்டே ஆகவேண்டும். அடிப்படை மானுட அறத்துக்கு எதிரானவை, மாறும் காலத்தின் மாறிய அறத்துக்கு ஒவ்வாதவை, மாற்றப்படவேண்டும். அறம் ஒன்றின்பொருட்டு மட்டுமே அந்த மாற்றங்கள் நிகழவேண்டும். அதில் இந்த வரிகளை விரித்தெடுத்துக் கொண்டே இருக்கிறேன் .“அடிப்படை மானுட அறத்துக்கு எதிரானவை, மாறும் காலத்தின் மாறிய அறத்துக்கு ஒவ்வாதவை, மாற்றப்படவேண்டும். அறம் ஒன்றின்பொருட்டு மட்டுமே அந்த மாற்றங்கள் நிகழவேண்டும்” அற்புதமான வரிகள் .இந்தவரியை எழுதும் போது இருந்த உங்கள் அக எண்ணத்தை அறிய விழைகிறேன்.மரபான ஒரு மதம் இன்றைய மானுட அறத்தை நோக்க வேண்டிய விதம் எப்படி இருக்க வேண்டும் என விழைகிறீர்கள்.

Comments