மாரிராஜ் இந்திரன் தேர்வுசெய்த கதை-1

அன்பிற்கினிய ஜெ அவர்களுக்கு,
                                          தங்கள் நலமறியவிழைகிறேன். ஊட்டி காவிய முகாம் சிறுகதை விவாதத்திற்காக அ.முத்துலிங்கம் அவர்களின் "என்னைத் திருப்பி எடு" கதையை தேர்ந்தெடுத்து இருக்கிறேன். அதன் word format file ஐ இணைத்துள்ளேன். மேலும் விவாதத்திற்காக அசோகமித்திரன் அவர்களின் ஐந்நூறு கோப்பை தட்டுக்கள் கதையையும் விரும்பினால் நண்பர்கள் வாசித்து வரலாம். அதன் pdf ஐயும் தனி மெயிலில்  இணைத்துள்ளேன். 
                                                              நன்றி 
                                                   உங்கள் அன்பு மாணவன்,
                                                            இ.மாரிராஜ்


என்னைத் திருப்பி எடு
அ.முத்துலிங்கம்


ஒரு பேச்சுக்குத்தான் அவன் அப்படிக் கேட்டான். மிதிலாவுக்கு அது பிடிக்கவில்லை. அவள் வழக்கம்போல ஒன்றுமே பேசவில்லை. ஆனால் முகம் வேறு யாருடையவோ முகம் போல நாலு கோணத்தில் மாறிவிட்டது. மேல் கோட்டின் நாலாவது பட்டனை வலது கையால் போட்டுக்கொண்டு, இடது கையால் கைப்பையை தூக்கினாள். அவள் வெளியே போனால் இந்தச் சண்டை முடிவுக்கு வராது. இரண்டு நாள் இப்படியே இழுக்கும்.

அவன் ஒன்றுமே கேட்கக்கூடாது. ஆனால் அவன் பற்றிய விசயம் எல்லாம் அவளுக்குத் தெரியும். ஒரு தடவை அவளிடம் கேட்டான். ‘நீ பல்கலைக்கழகத்தில் என்ன படிக்கிறாய்?’ சாதாரண கேள்விதான். அவளுடன் கடந்த ஆறு மாதகாலம் ரொறொன்ரோ நடு மையத்தில் உயர்ந்து நிற்கும் 21 மாடிக் கட்டடத்தில் ஏழாவது மாடியில் 716ம் எண் வீட்டில்  ஓர் அறையில் இருவரும் ஒன்றாக சேர்ந்து வசிக்கிறார்கள். நீ என்ன படிக்கிறாய் என்று அவன் கேட்கக்கூடாதா? அவள் பதில் சொன்னாள். ’தண்ணீரின் ஈரத்தன்மை பற்றி ஆராய்ச்சி செய்கிறேன்.’ அவனை அவள் கேலி செய்கிறாள். அவன் மேல்படிப்பு படிக்காமல் சுப்பர்மார்க்கெட்டில் சாதாரண எடுபிடியாக வேலை செய்வது அவளுக்கு அவமானமாக இருந்தது. அதை இப்படித்தான் அவனுக்கு உணர்த்துவாள். ஆனால் அந்த வீட்டு முழு வாடகையையும் அவன் சம்பளத்தில்தான் கட்டுகிறான். வீட்டுச் செலவுக்கும், உணவுக்கும் மட்டும் அவள் பாதி பணம் தருகிறாள்.

சரி, சமையல் வேலையில் சரிசமமாக இருவரும் பங்கேற்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. அவனுக்குத் தெரிந்த மாதிரி சமைத்து வைப்பான். அவளுக்கு  என்ன மாதிரி உணவு பிடிக்கும் என்று அவனுக்கு எப்படி தெரியும்? தினம் புதிதாக ஏதாவது செய்வான். பழைய உணவு அவனுக்குப் பிடிக்காது. அது மிதிலாவுக்குத் தெரியும். அவனுடைய அம்மா முதல்நாள் சமைத்த உணவை தந்ததற்கு கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடியவன். ஒரு 19 வயதுப் பையன் வீட்டைவிட்டு வெளியேறுவதற்கு அது போதிய காரணம் இல்லை என்று அவனுக்கு இப்போதுதான் தெரிகிறது.

கதவுக் கைபிடியில் அவள் கையை வைத்துவிட்டாள். முதுகுப்பை முதுகிலே தொங்கியது. ‘நான் இப்ப என்ன சொன்னேனென்று இத்தனை கோபம். பதில் சொல்லிவிட்டு போனால் நல்லது. எப்போவோ வாங்கிய ’பேகிளை’ சிப்லொக் பையில் போட்டு, அதை இன்னொரு சிப்லொக் பையில் போட்டு மீண்டும் இன்னொரு பையில்  மூடி குளிர் பெட்டியில் வைப்பதில் என்ன பிரயோசனம்? இந்தச் சின்னக் கேள்விக்கு பதில் சொல்வதில் என்ன கஷ்டம். எங்கள் சிறிய வருமானத்தில் சிப்லொக் பை விற்பனையை ஏன் கூட்டவேண்டும்?’

அவர்கள் ஆறுமாதமாக ஒன்றாக வாழ்கிறார்கள். முதல் மாதம் அதி இன்பம் தந்த மாதம். அவள் கையை உயர்த்தி சொறிந்தபோதும் ,கொட்டாவி விட்டபோதும், பல் துலக்கியபோதும் அபூர்வ அழகுடன் இருந்தாள். இரண்டாவது மாதம் முதல் சண்டை வந்தது. மூன்றாவது மாதம் மூன்று சண்டை. சண்டை முடிந்து சமாதானம் ஆனபோது பெரிய கொண்டாட்டமாக இருந்தது. நாலாவது மாதம் வாரத்துக்கு இரண்டாக உயர்ந்தது. இப்போதெல்லாம் தினம் தினம் சண்டைதான். அவன் ஏதாவது சொன்னால் அவள் ஏதாவது உடனே சுருக்கென்று சொல்லிவிடுவாள். ஒரு சண்டை  முடிந்து சமாதானம் ஆவதற்கிடையில் இன்னொன்று தொடங்கிவிடும்.

யார் என்ன செய்யவேண்டும் என்று பட்டியல் போட்டுக்கொண்டுதான் ஆரம்பித்தார்கள். அவன் சமையல் செய்வது. அவள் பாத்திரம் கழுவுவது. வீட்டுக் கணக்குகள் பார்ப்பது அவன். சாமான்கள் வாங்குவது  அவன். சலவை  அவள் பொறுப்பு. குப்பை அகற்றுவது  அவன். வீடு துப்புரவாக்குவது அவள். துடைப்பக்கட்டையின்  பத்து பயன்பாடுகளை அவள் கண்டுபிடித்திருக்கிறாள். இப்படி பங்கு போட்டு காரியங்கள் செய்தாலும்  சண்டை வந்தது. இரவில் யார் கடைசியாக விளக்கை அணைப்பது?  யார் சுட்டுப்போன பல்ப்பை மாற்றுவது? யார் பூக்கன்றுக்கு  தண்ணீர் ஊற்றுவது? கதவு மணி அடித்தால் யார் திறப்பது?

கதவைத் திறந்து வெளியே போகுமுன்னர் அவள் தன் செல்பேசியை பார்த்தபடியே சொன்னாள் ’நான் போகிறேன்.’ ’எங்கே?’  ’வெளியேதான்.’ ’திரும்பிவர மாட்டீரா?’ ’இரவு வருவேன். என் சாமான்களை எடுத்துப் போவதற்கு.’ ’நிரந்தரமாகப் பிரிகிறீரா?’ ’நிரந்தரமாகத்தான்.’ ‘மூன்று சிப்லொக் பைகளில் எதற்காக ’பேகிளை’ சேமித்து வைக்கிறீர் என்று கேட்தற்காகவா? இது சரியான காரணமா? தண்ணீரில்தான் ஈரத்தன்மை குறைந்தது என்று நினைத்தேன். உம்முடைய இதயத்திலும்  ஈரத்தன்மை போய்விட்டதா?’ ’இரவு சொல்கிறேன். எட்டு மணிக்கு என்னை கொண்டுபோய் விடவேண்டும்.’ ’ஏன் நான் கொண்டுபோய் விட வேண்டும்? வாடகைக்காரில் போகலாம்தானே.’ ’அது எனக்குத் தெரியாதா? என்னை எங்கே, எந்த இடத்திலிருந்து அழைத்து வந்தீர்களோ அதே இடத்தில் என்னை கொண்டுபோய் இறக்கிவிடவேண்டும்.’ அவன் ஏதோ சொல்வதற்கு வாயை திறந்தான். கதவு படக் என்று சத்தம் செய்து மூடியது. அவனும் மூடினான்.

சுப்பர்மார்க்கெட்டில் அவனுடைய மேலாளரை அவனுக்கு பிடிக்காது. அவருக்கும் அவனைப் பிடிக்காது என்றே நினைத்தான். மனேஜர் பேசத் துடங்கினால் நிறுத்தமாட்டார். வார்த்தைகள் மந்திரக்காரனின் வாயிலிருந்து ரிப்பன் வருவதுபோல நிறுத்தாமல் வந்து  வசனம் நீண்டுகொண்டேயிருக்கும். அவன் ஆச்சரியத்துடன் அவருக்கு ஓர் அடி பின்னால் பார்ப்பான். முற்றுப்புள்ளி இளைக்க இளைக்க அவருக்கு பின்னால் ஓடிவருவது அவன் கண்களுக்கு மட்டுமே தெரியும்.  ஐந்து நட்சத்திர கட்டளைத் தளபதி என்று மனேஜர் தன்னை நினைத்திருந்தார். கேள்விகளை யூகித்து பதில்களை  யோசித்து தயாராக அவன் வைத்திருக்கவேண்டும். மணித்தியாலத்துக்கு அவனுக்கு டொலர் 11.40 சம்பளம். அதனிலும் குறைய அவனுக்கு சம்பளம் தர மனேஜருக்கு விருப்பம்தான். ஆனால் முடியாது. ரொறொன்ரோவில் இதுதான் ஆகக் கடைசியான சட்டம் அனுமதித்த சம்பளம். அவனை ’அரை மூளை’ என்றும் அவர் சமயாசமயங்களில் அழைத்திருக்கிறார். அதையும் சட்டம் அனுமதித்தது.

பழைய கால ஆங்கில பேய்ப்படங்களில் உயரமாக ஒருவர் வருவார். போரிஸ் கார்லொஃவ் என்று பெயர். பல்லுக்கொதி வந்து கன்னம் ஒரு பக்கம் வீங்கினால் போரிஸ் கார்லொஃவ் எப்படி தோற்றமளிப்பாரோ அப்படியே மனேஜர் இருந்தார். இரண்டு வருடகாலமாக அவருடன் வேலை செய்கிறான். இந்த இரண்டு வருடங்களில் நாலு தடவை வீட்டிலிருந்து துப்பாக்கி கொண்டுவந்து அவரை சுட்டுவிடவேண்டும் என்று அவனுக்கு தோன்றியிருக்கிறது. ஆனால் அவன் செய்யவே இல்லை.

அந்த சுப்பர்மார்க்கெட்டில் 12 காசாளர்கள் ஒரே சமயத்தில் வேலை செய்வார்கள். ஒவ்வொரு காசாளர் முன்பும் வண்டில்களுடன் நிறையப் பேர் வரிசையில் நிற்பார்கள். ஓடும் பெல்ட்டில் சாமான்கள் வரும். அதன் கோடுகளை மந்திரக் கண்கள் கண்டுபிடித்து விலைகளை தானாகவே பதியும். சாமான்களை பைகளில் போட்டு வாடிக்கையாளருக்கு கொடுத்து பணம் பெறவேண்டும். சிலர் தங்கள் செல்பேசிகளை நீட்டி கணக்கை தீர்ப்பார்கள். சிலர் கடன் அட்டையோ உடன் அட்டையோ பாவிப்பார்கள். சிலர் காசுத்தாள்களை கொடுப்பார்கள். அப்போதுதான் பிரச்சினை முளைக்கும். அவனுக்கு கணக்கு அப்படி இப்படி. சிலவேளைகளில் கணக்கு ஒப்புவிக்கும் சமயம் காசு குறைந்திருக்கும். சொந்தப் பணத்தை கட்டி சமாளித்திருக்கிறான்.

ஒருநாள் வண்டிலைத் தள்ளிக்கொண்டு பச்சைக் கண் அழகி ஒருத்தி வந்தாள். அன்று மட்டும்தான் பச்சைக் கண். சிலவேளைகளில் அவளுக்கு சாம்பல் கண். ஒருநாள் நீலக் கண்ணுடன் வந்திருந்தாள். அத்தனை அழகு. பார்த்தபின் கண்ணை விலக்கமுடியாது. கண் நிறத்துக்கு ஏற்ப உடை அணிவதுதான் அவளில் விசேஷம். அன்று நிறையப் பொருட்கள் வாங்கியிருந்தாள். அவன் சாமான்களை பையிலே அடுக்கும்போது பிழை நேர்ந்துவிட்டது  அது அதற்கு ஒரு முறை உண்டு. ஒழுகக்கூடிய சாமான்களை தனிப்பையில் வைக்கவேண்டும். குளிரூட்டப்பட்ட பொருட்களை வேறு குளிரூட்டப்பட பொருட்களுடன்தான் இடவேண்டும். வீடு சுத்தமாக்கும் வேதியல் பொருட்களை  உணவுகளுடன்  கலக்கக்கூடாது. இப்படி பல விதிகள். சிலவேளை நினைவில் இருக்கும். பல வேளை மறந்துவிடுவான்.  அவள் நன்றி என்று அழகாக உச்சரித்துவிட்டு சாமான்களைத் தள்ளிக்கொண்டு போனாள். வீட்டுக்குப்போய் சரி பார்த்தபோது ஒரேயொரு முட்டை உடைந்துவிட்டது. அவள் 20 மைல் தூரம் காரை ஓட்டிவந்து முட்டை உடைந்துவிட்டது என்று முறைப்பாடு செய்தாள். பல்லுக்கொதி பிசாசு மனேஜர் அவனைத் திட்டினார். அடுத்த நாள் அவனுக்குத் தண்டனை என்று சொன்னார்.

அப்படித்தான் வாடிக்கையாளர் சேவையில் அவன் வேலை செய்ய நேர்ந்தது. அதைவிட பெரிய தண்டனை கிடையாது. வாங்கிய பொருளை திருப்புவதற்காக நீண்ட வரிசை நிற்கும். ’எதற்காக சாமானை திருப்புகிறீர்கள்?’ என்று கேட்டு பதிலை கணினியில் பதிவு செய்த பின்னரே காசை திருப்பிக் கொடுக்க முடியும். அல்லது புதிய சாமான் எடுத்துப்போக அனுமதி கிடைக்கும். வாடிக்கையாளர்கள்  சொல்லும் காரணங்கள் வேடிக்கையாக இருக்கும். ’முடிவுதேதி முடிந்துவிட்டது.’ ’அழுகிவிட்டது.’ ’உடைந்துவிட்டது.’ ’பூசணிக்காய் வேலைசெய்யவில்லை.’ ’பழுதானது.’ ’மணக்கிறது.’ ’ருசி சரியில்லை.’  காதலிக்கு பிடிக்கவில்லை என பாதி சாப்பிட்ட பீட்சாவை காதலியின் பல் அடையாளத்துடன் ஒருவன் கொண்டுவந்திருக்கிறான். ’சேர், இந்தரக வெண்ணெய் நாங்கள் விற்பதில்லை. வேறு எங்கோ வாங்கியிருக்கிறீர்கள்.’ ‘இல்லையே இங்கேதான் வாங்கினேன்.’ ‘நாங்கள் இங்கே இவ்வளவு மோசமான மலிவான வெண்ணெய் விற்பதில்லை.’ சிலர் எரிச்சல் படுத்துவார்கள். சத்தமிடுவார்கள். ஆனால் அவன் வாயை சிரித்தமாதிரியே வைத்திருக்கவேண்டும். சமயங்களில் வீட்டிலிருந்து துப்பாக்கியை எடுத்து வந்து  இந்தப் பொய்யர்களை சுடத் தோன்றும். பின்னர் அவனிடம் துப்பாக்கி இல்லை என்பது நினைவுக்கு வரும்.

சுப்பர்மார்க்கெட்டில் 6340 பொருட்கள் தத்தமது மந்திரக்கோடுகளுடன் இருந்தன. சனங்கள் இரவும் பகலும் வந்து வாங்கிப் போனார்கள். அதிகமான உணவு வகைகள் சமைக்கவே தேவையில்லை. அவற்றை இரண்டு நிமிடம் நுண்ணலை அடுப்பில் வேகவைத்தால் உணவு தயார். பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னர் மனிதன் காலை எழும்பியதும் உணவைத் தேடத் துடங்குவான். சூரியன் மறையும் வரைக்கும் தேடுவான். அன்று உணவு கிடைத்தால் உண்பான். கிடைக்காவிட்டால் பட்டினிதான். இப்பொழுது அவசர அவசரமாக வந்து ஐந்து நிமிட உணவை வாங்கிக்கொண்டு ஓடுகிறார்கள்.  எத்தனை வசதி. ஆனாலும் முறைப்பாடுகளுக்கு குறைவில்லை.

இரண்டு வாரம் முன்பு மிதிலா  இரவு எட்டு மணிக்கு வந்து தன் சாமான்களை எடுத்துப்போனாள். அவள் அவனுடன் சேர்ந்து வாழ வந்தபோது அவளிடம் ஒரு மெலிந்த சூட்கேஸ்தான் இருந்தது. திரும்பிப் போகும்போது இரண்டு சூட்கேசுகள், நாலு அட்டைப்பெட்டிகள் சேர்ந்துவிட்டன. ஆறு மாதத்தில் அவன் அவளுக்கு நிறையப்  பரிசுகள் கொடுத்தான். உடுப்புகள் வாங்கினான். அவை பெட்டிகளை நிரப்பிக் கிடந்தன. பெட்டிகளை எடுத்துப் போக அவன் உதவிசெய்தான். வேலைக்காரனுக்கு காட்டும் மரியாதை அவனுக்கு கிடைத்தது. காரிலே ஏறியதும் எங்கே என்றான். ’அந்த உணவகம்’ என்றாள்.  ’எந்த உணவகம்?’ ’நான் எங்கேயிருந்து உன் காரில் ஏறி உன் வீட்டுக்கு வந்தேனோ அந்த உணவகம்.’ ’உணவகத்திலா நீ இனிமேல் தங்கப் போகிறாய்?’ அவள் பதில் கூறவில்லை.

உணவகம் வந்தது. நெருப்பில் இருந்து தப்பி ஓடுவதுபோல காரில் இருந்து பாய்ந்து இறங்கி கைப்பையை எடுக்காமல், கதவை சாத்தாமல் வீதியை கடந்து மறுபக்கம் ஓடினாள். அங்கே ஒருவன் நின்றான். மூன்று நாள் சாப்பிடாததுபோல முகம்.  தலை வாரியிருக்கவில்லை. ஒருவாரம் முன்பு சுத்தமாயிருந்த சேர்ட்.  அவன் விரித்த கைகளுக்குள் ஒரு கோழிக்குஞ்சு ஓடுவதுபோல நுழைந்து அவனைக் கட்டிக்கொண்டாள். மிதிலா ஒருநாளும் அவனிடம் அப்படி ஓடிவந்தது கிடையாது.  கட்டிப்பிடித்ததும் இல்லை. அவன் அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றான். பின்னர் அவனாகவே சாமான்களை இறக்கிவைத்துவிட்டு காரை கிளப்பினான். அவள் பாய்ந்து கடந்த அந்தக் காட்சி சினிமா போல பலதடை மீண்டும் மீண்டும் அவன் மனதில் ஓடியது.

மனேஜர் அவனைக் கூப்பிட்டபோது அவனுக்கு விசயம்  ஓர் அளவுக்கு விளங்கிவிட்டது. இன்னொரு முறைப்பாடு வந்திருக்கிறது. வேறு எதற்கு கூப்பிடுவார்? உன்னுடைய அர்ப்பணிப்பான, புத்திசாலித்தனமான, கடும் உழைப்புக்கு மாட்சிமை பொருந்திய கனடிய ஆளுநர் உனக்கு  விருதளிக்கப் போகிறார்  என்று சொல்லப் போகிறாரா? மனேஜரின் கதவிலே அவர் பெயர் எழுதியிருந்தது. உள்ளே நுழைந்து கொலை செய்தவன் தீர்ப்புக்கு காத்து நிற்பதுபோல தலையைக் குனிந்துகொண்டு நின்றான். மனேஜர் அவன் முகத்தை பார்க்காமல் மேசையில் கிடந்த கண்ணாடி உருண்டையை உருட்டியபடி நீண்டநேரம்பேசினார். இரண்டு நிமிடம் கழித்து விசயத்துக்கு வந்தார். அவன் வாடிக்கையாளருடைய பையிலே தக்காளியை கீழே போட்டு அதற்குமேல் கனமான பொருளைப் போட்டதால் தக்காளி நசுங்கிவிட்டது. இந்த சுப்பர்மார்க்கெட்டில் வாடிக்கையாளர்தான் முக்கியம். அவனல்ல. தக்காளியுமல்ல. ‘இனிமேல் நீ வீட்டுக்கு போகலாம்’ என்றார். ’வீட்டுக்கா?’ ’ஆமாம்.’ ’இப்போதா?’ ’இப்போதுதான்.’ அவனால் நம்ப முடியவில்லை. இரண்டு டொலர் பெறுமதியான தக்காளிக்காக அவனை வீட்டுக்கு அனுப்புகிறார்கள். தன் சேர்ட்டிலே குத்தியிருந்த ’மாயன்’ என்ற பெயர் அட்டையை கழற்றி மேசையில் வைத்தான். இனிமேல் பெயர் அட்டை இல்லாமலே அவன் தன் பெயரை ஞாபகத்தில் வைக்கவேண்டும். போரிஸ் கார்லொஃவ் எழும்பி நின்று கைநீட்டினார். அவன் கவனிக்காமல் வெளியே வந்தான்.

அவன் அம்மா சொல்லுவார். ’உன் பெயர் உன் சேர்ட்டிலே குத்தியிருக்கக் கூடாது. கழுத்திலே மாலையாக  தொங்கக்கூடாது.  கதவிலே உன் பெயர் இருக்க வேண்டும்.’ அம்மாவுக்கு அவன் சுப்பர்மார்க்கெட்டில் வேலை செய்வது பிடிக்கவே இல்லை. ’உன்னுடைய தகுதிக்கு நீ ஓர் அறையில் உட்கார்ந்து வேலை செய்யவேண்டும். வீட்டுக்கு வா. மறுபடியும் படி’ என்று பலதடவை சொல்லிவிட்டார். அம்மாவை உடனே அழைக்கவேண்டும் போல இருந்தது. அவர் அடிக்கடி சொல்வார். ’இந்த உலகத்தில் எல்லோரும் உன்னை கைவிட்டாலும் கடைசிவரை கைவிடாத ஒரே ஆத்மா உன் அம்மாதான். அதை மறக்காதே.’

காரை வேகமாக ஓட்டினான். அவனுக்கு முன்னால் இன்னொரு பெரிய வாகனம் போனது. பின்னால் இப்படி எழுதியிருந்தது. ’இந்த எழுத்துக்களை உன்னால் வாசிக்க முடியும் என்றால் நீ அளவுக்கு அதிகமாகக் கிட்ட வந்துவிட்டாய் என்று அர்த்தம். தூர விலகு.’ வாகனம் மிக மெதுவாக நகர்ந்தது. அவனால் முன்னேற முடியவில்லை. எரிச்சல் எரிச்சலாக வந்தது. திடீரென்று யோசனை எழுந்தது. ’வேகமாகப் போய் என்ன சாதிக்கப் போகிறேன். வீட்டிலேதான் மிதிலா இல்லையே. அவளுக்கு சமைக்கத் தேவையில்லை. மூன்று சிப்லொக் பைகளில் சேமித்துவைத்த ’பேகிளை’ அவள் தன் காதலுனுடன் பகிர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருப்பாள்.’

லோரன்ஸ் வீதியில் அவன் பிறந்த மருத்துவமனை எதிர்ப்பட்டது. எப்பொழுது அந்த வழியால் போனாலும் அவனுடைய அம்மா அவன் பிறந்த மருத்துவமனையை சுட்டிக்காட்ட தவறுவதில்லை. எட்டு மாடிகள் கொண்ட உயர்ந்த நீலக் கட்டடம். திடீரென்று மருத்துவ மனைக்குள் காரை வெட்டித் திருப்பினான். வரவேற்பறையில் இரண்டு பெண்கள் சீருடையில் உட்கார்ந்திருந்தார்கள். இன்னொரு பெண் சற்று தள்ளி அமர்ந்து ஏதோ கணினியில் தட்டச்சு செய்தாள். சும்மா உட்கார்ந்திருந்த பெண்ணின் முன் சென்று நின்றான். அவள் நிமிர்ந்து பார்த்து மருத்துவமனைப் புன்னைகை ஒன்று செய்தாள். 

‘நான் என்னை திருப்பிக் கொடுக்க வந்திருக்கிறேன்.’

’மன்னிக்கவும். புரியவில்லையே.’

’நான் இங்கேதான் பிறந்தேன். நான் என்னைத் திருப்பிக் கொடுக்கவேண்டும்.’

’ஏன்?’

’பழுதான சாமானைத் திருப்பிக் கொடுக்கலாம்தானே.’

எல்லோருடைய கவனமும் அவன் மீது விழுந்தது. ஒன்றும் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

கம்புயூட்டரில் தட்டச்சு செய்த பெண் திரும்பி அவனைப் பார்த்து ‘கொடுக்கலாம். ஆனால் உங்கள் தாயார் வந்துதான் திருப்பிக் கொடுக்கவேண்டும்’ என்று சிரிப்பை அடக்கிக்கொண்டு கூறினாள். பெண்கள் ரகஸ்யமாக ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

அவனுக்கு என்ன நடந்தது? ஏன் இப்படி ஆவேசம் வந்ததுபோல உள்ளே நுழைந்தான். யாரோ சிரித்தது அவனுக்கு கேட்டது. வெட்கமாகிவிட்டது. அவனுடைய அம்மா ‘உனக்கு விசர் பிடித்துவிட்டது’ என்று திட்டுவது நினைவுக்கு வந்தது. அம்மாவை அழைத்து வேலை போனதைச் சொல்வோமா என்று நினைத்தான். அவன் எப்பொழுது அம்மாவை அழைத்தாலும் அது ஏதாவது சோகச் செய்தியை சொல்வதற்காகவே இருக்கும். ஒரு நல்ல செய்தி வந்த பிறகு அழைக்கலாம். விரைவில் அவன் ஒரு வேலையை தேடிவிட்டு அழைத்தால் எத்தனை சந்தோசப்படுவார். அப்படி நினைத்தபோதே அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்தது. அவன் அம்மாவை நினைத்தாவே அவருக்கு எப்படியோ தெரிந்துவிடும். அப்படி பலமுறை நடந்திருக்கிறது.

’என்ன அம்மா?’

’நீ ஏன் கூப்பிடவில்லை.’

’செல்போன் தண்ணீரில் விழுந்து சில நம்பர்கள் கரைந்துவிட்டன.’

’என்னுடைய நம்பர் உனக்கு ஞாபகம் இல்லையா?’

’இல்லையே. இப்போது கிடைத்துவிட்டது. தவறாமல் இனிமேல் அழைப்பேன்.’

தாயாருக்கு பொய் சொன்னது என்னவோபோல இருந்தது. தாயாரை தான் கொடுமைப்படுத்தியதற்கு இது தண்டனையோ என யோசித்தான்.  ஒருதடவை அவர் மருத்துவ மனையில் கிடந்தபோது அங்கே போகாமல் மிதிலாவின் பிறந்தநாளைக் கொண்டாடியது நினைவுக்கு வந்தது. அவள் சொன்னாள். ’18 வயதுப் பிறந்த நாள் ஒருமுறைதான் வரும்.’ உடனேயே மனம் மாறியது. பெரும் சோகம் அவனை மூடியது. துயரத்தை மறக்க குதிரை ஓடும் சத்தத்தை வாயினால் உண்டாக்கியபடியே காரை ஓட்டினான். மனது கொஞ்சம் அமைதியடைந்தது.

ஓர் உயரமான பெண் நாயை சங்கிலியில் பிடித்தபடி நடந்தாள். அழகான காட்சி. அவளுடைய காதலனுடன் செய்த ஒப்பந்தப்படி நாயை நடைக்கு கூட்டிச் செல்வது அன்று அவள் முறையாக இருக்கலாம். மிதிலாவை நினைத்தான். எங்கே தவறு நடந்தாலும் அதை திருப்பி வளைத்து கொண்டு வந்து அவன் தலையில் போட்டுவிடுவாள். சிறந்த வழக்கறிஞராகும் தகுதி அவளுக்கிருந்தது. அவள் பக்கத்தில் நிற்கும்போது அவன் போதாமை பெரிதாகத் தெரியும். தரிப்பிடத்தில்  காரை நிறுத்திவிட்டு வீட்டினுள் நுழைந்தான். ஒரு சத்தமும் இல்லாமல் அது அமைதியாக இருந்தது. மேல்கோட்டை கழற்றி மாட்டினான். காலணிகளை உதறினான். கார்ச் சாவியை மேசையில் வைத்தான். செல்பேசியை மின்னேற்றியில் பொருத்தினான். அவன் நிழல் சுவரில் விழுந்தது. என்ன அழகான நிழல்? என்ன ஒய்யாரம்? அதைப் பார்க்க ஒருவரும் இல்லை.

கதவு நீக்கல் வழியாக ஒருகடிதம் உள்ளே தள்ளப்பட்டு கிடந்ததை கண்டான். ஆச்சரியமாக இருந்தது. அவனுக்கு கடிதங்கள் வருவதில்லை. பழுப்பு உறை. அரசாங்கக் கடிதமாக இருக்கவேண்டும். கனடிய சட்டமா அதிபரிடம் இருந்து வந்திருந்தது. கை கொஞ்சம் நடுங்கியது. அவன் ஒரு குற்றமும் செய்யவில்லையே. சுப்பர்மார்க்கெட்டில் ஒருமுறை 12 டொலர் கணக்கு காட்டாமல் விட்டதாக இருக்குமா?

பயத்துடன் கடிதத்தை பிரித்தான். அவன் கண்கள் விரிந்தன. அவனை ஒரு வழக்கில் ஜூரியாக கடமையாற்ற அழைத்திருந்தார்கள்.  கடவுள் ஒரு யன்னலை மூடினால் ஒரு கதவை திறப்பார் என்று சொல்லியிருக்கிறார்கள். நாலு கதவுகளை அல்லவா திறந்துவிட்டிருக்கிறார். கொண்டாடவேண்டிய பெரும் சந்தோசத்துக்குரிய விசயம். வழக்கு விவரம் தெரியாது, ஆனால் இரண்டு வாரத்துக்குள் போக வேண்டும். சம்பளம் நாளுக்கு 40 டொலர்கள். வழக்கு இழுத்தடித்தால் நாளுக்கு 100 டொலராக உயர்ந்துவிடும்.

அவனால் மகிழ்ச்சியை தாங்க முடியவில்லை. யாரோடு அந்த நல்ல செய்தியை பகிரலாம் என்று யோசித்தால் ஒருவரும் இல்லை. அம்மாவுக்குச் சொன்னால் பெருமைப்படுவாரே என்று நினைத்தான். என்ன வழக்காக இருக்கும்? கொலைக்குற்றமா அல்லது கள்ளக் கடத்தலா? ஜூரிமாருக்கு பெயரை எழுதி சேர்ட்டிலே குத்துவார்களா? அல்லது பெயர் அட்டையை கழுத்திலே தொங்க விடுவார்களா? ஒருவேளை  ஜூரி மேசையிலே பெயர்ப் பலகைகளை அவர்கள்   வைக்கக்கூடும். ஒரு மாதத்துக்கு மேல் வழக்கு நீண்டால் நல்ல தொகை கிடைக்கும். அம்மாவுக்கு பிடித்த ஏதாவது விலை உயர்ந்த பரிசுப் பொருளை வாங்கிக்கொடுக்கலாம்

ஒரு பேச்சுக்கு குற்றவாளி மிதிலாவாக இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தான். கூண்டிலே நின்றாலும் அவள் வாள் சுழற்றுவதுபோல வேகமாகப் பேசுவாள். குரல் உச்சத்துக்கு போகும்போது அவள் பேச்சுக்குரல் நாய் குரைப்பதுபோல ஆகிவிடும்.  ஒரு பேச்சுக்கு அவள் திருடியாக இருக்கலாம். அரசாங்கத்தை ஏமாற்றியவளாக இருக்கலாம்.  மூன்றுநாள் சாப்பிடாமல் இருந்தவனை கொலை செய்தவளாகவும் இருக்கலாம். ஒரு பேச்சுக்கு அவள் குற்றவாளி என்று அவன் கையை தூக்கும்போது அவனுடைய மகிழ்ச்சி எத்தனை மடங்கு பெருகியிருக்கும். இந்த உலகத்தில் பழிவாங்கும் மகிழ்ச்சியின்  உச்சத்திற்கு ஈடே கிடையாது. 

END

Comments

Popular posts from this blog

கட்டுரைகள்

Judgemnt of GRS