பாரி தெரிவு செய்த கதை


மேற்படிப்புக்காக நான் அமெரிக்காவுக்குப் போகிறேன் என்பதைத் தெரிந்து கொண்டதும் தாத்தா எனக்கு ஒரு விடையளிப்புக் குறிப்பு எழுதினார். 'புழுத்துப்போன முதலாளித்துவப் பன்றியேஎன்று தொடங்கியிருந்தது குறிப்பு. 'விமானப் பயணம் பாதுகாப்பானதாக அமையட்டும்அன்புடன்தாத்தா'. 1991 ஆம் வருடத்திய தேர்தலில் விநியோகித்த சிவப்புநிறமான கசங்கிய வாக்குச்சீட்டில் அது எழுதப்பட்டிருந்ததுதாத்தாவின் கம்யூனிஸ்ட் தேர்தல் சேகரிப்பின் ஆதாரப் பொருள்களில் ஒன்று அதுலெனின்கிராடு கிராமத்தைச் சேர்ந்த எல்லாருடைய கையெழுத்தும் அதில் இருந்தது.


அதுபோன்ற  கௌரவம் கிடைத்ததில் நான் நெகிழ்ந்து போனேன்அப்படியே உட்கார்ந்து ஒரு டாலர் நோட்டை எடுத்து தாத்தாவுக்குப் பின்வரும் பதிலை எழுதினேன்: 'கம்யூனிஸ்ட் போலியேகடிதத்துக்கு நன்றிநாளைக்குப் புறப்படுகிறேன்அங்கே போனதும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ  அவ்வளவு சீக்கிரம் ஒரு அமெரிக்கப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள முயற்சி செய்வேன்அமெரிக்கப் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளவும் முயற்சி செய்வேன்அன்புடன்உங்கள் பேரன்உயர்நிலைப் பள்ளியில் என்னுடைய முதல் வருடம்என்னுடைய முன்னோடிகள் குடிப்பதிலும் புகைப்பதிலும் கலவியிலும் சூதாட்டத்திலும் பெற்றோரிடம் புளுகுவதிலும் மோட்டார் சைக்கிள்களில் இலவசப் பயணம் செய்வதிலும் கள்ள நோட்டு அடிப்பதிலும் அல்லது கால்பந்தாட்டப் பந்தயங்களுக்கு வெடிகுண்டு தயாரிப்பதிலும் மும்முரமாக இருந்த போது நான் படித்தேன்ஆங்கிலம்சொற்களையும் இலக்கண விதிகளையும் நெட்டுருச் செய்தேன்கிழக்கு ஐரோப்பியர்களுக்காகப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பேச்சு வழக்குகளைப் பயிற்சி செய்தேன்.'பணத்தை கவனத்தில் வைஎன்ற பேச்சு வழக்கை திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்தேன்தெருவிலும் மழையிலும் தூக்கத்திலும் கூடச் சொல்லிக் கொண்டிருந்தேன்இதுபோன்ற பிரயோகங்கள் உங்கள் நாக்கை வளைக்க உதவுகின்றனசெவிப்புலனை வளர்க்கின்றனஅப்பார்ட்மெண்டில்  நான் தனியாகத்தான் வசித்தேன்ஏனென்றால் நான் நேசித்த எல்லாரும் அதற்குள்ளாக இறந்து போயிருந்தார்கள்முதலில் பாட்டிபிறகு அம்மாவும் அப்பாவும்தாத்தா லெனின்கிராட் என்று பெயர் மாற்றப்பட்ட கிராமத்துக்குப் போனார்திரும்ப நகரத்தில்  குடியேறவோ வந்து போகவோ கூட மூர்க்கமாக மறுத்துவிட்டார்.

அபூர்வமான சந்தர்ப்பங்களில்குறிப்பாக நாங்கள் பெரிதாக சண்டை போட்டபோதோஅதில் மனம் வருந்தியதாக அவர் நடித்தபோதோ மிக மோசமாக எதையாவது நான் சொல்லியிருக்கவேண்டும்.

எனவே என்னுடைய அதிருஷ்டத்தை வேறு எங்காவது தேட முடிவு செய்தேன்.

1999 வசந்த காலத்தொடக்கத்தில் அர்கான்சாஸ் பல்கலைக் கழகத்தில் எனக்கு அனுமதி கிடைத்ததுஇலவசச் சலுகைகளும் கிடைத்தனமுழு கல்விக் கட்டணம்அறைஉணவுவிமான டிக்கெட்டு எல்லாம்.  நான் தாத்தாவை அழைத்தேன்.

'என் பேரனேமுதலாளியேஎன்று தொடங்கினார். 'நீ என்னிடம் இப்படி நடந்துகொள்வாய் என்று என்னால் நம்ப முடியவில்லைநான் எதையெதையெல்லாம் கடந்து வந்தேன் என்று உனக்குத் தெரியாதா?'

**********
தாத்தா  கடந்து வந்தவை அடிப்படையில் இவைதாம்அது 1944 ஆம் வருடம்தாத்தா அவருடைய இருபதுகளின் நடுவில் இருந்தார்அவர் முகம் இறுக்கமானதாக ஆனால் அழகானதாக இருந்ததுஅவருடைய மூக்கு கூர்மையானதாக இருந்ததுபுதியதும் மகத்தானதும் உலகத்தையே மாற்றி விடக் கூடியதுமான ஏதோ ஒன்றால் அவருடைய ஆழமான விழிகள்  ஒளிர்ந்தனஅவர் ஏழையாக இருந்தார்என்னிடம் அடிக்கடி சொல்வார்: 'காலைச் சிற்றுண்டிக்கு ரொட்டியையும் க்ரேப் ஆப்பிளையும் சாப்பிடுவேன்பகலுணவுக்கு ரொட்டியும் கிரேப் ஆப்பிளும்இரவு உணவுக்கும் கிரேப் ஆப்பிள்ஏனென்றால் பகலுணவு சமயத்திலேயே ரொட்டி தீர்ந்து போயிருக்கும்'.

அதனால்தான் கம்யூனிஸ்டுகள் உணவுப் பொருட்களைத் திருடுவதற்காகப் பல்கேரியாவிலுள்ள கிராமத்துக்கு வந்தபோது தாத்தா அவர்களுடன் சேர்ந்து கொண்டார்அவர்கள் காடுகளுக்குள் ஓடினார்கள்பதுங்கு குழிகளை வெட்டினார்கள்வாரக்கணக்காக இரவும் பகலும் அதிலேயே வசித்தார்கள்வெளியே பாசிஸ்டுகள் அவர்களை மோப்பம் பிடிக்க அலைந்தார்கள்வேட்டை நாய்களுடன் அவர்களைத் துரத்த முயற்சி செய்தார்கள்;துப்பாக்கிகளுடனும் வெடிகுண்டுகளுடனும் ஏவுகணைகளுடனும் வேசி மகன்களான ஜார் சந்ததியினர் விரட்டிக்கொண்டிருந்தார்கள்ஒரு சந்தர்ப்பத்தில் தாத்தா என்னிடம் சொன்னார்: 'ஒரு பதுங்கு குழி குறுகலானது என்று நீ நினைத்தால் நீயாகவே ஒன்றைத் தோண்டுஇல்லை இல்லை நீயாகவே தோண்டி ஒரு வாரம் கூடவே தங்குவதற்காக பதினைந்து பேரைச் சேர்த்துக்கொள்ஒன்றிரண்டு கர்ப்பிணிகளும் இருக்க வேண்டும்ஒரு பசித்த வெள்ளாடும்அதற்கப்புறம் உலகத்திலேயே மிகக் குறுகலானது கல்லறைதான் என்று எல்லாரிடமும் சொல்லித் திரியலாம்' 'கல்லறைதான் இடுங்கியது என்று நான் ஒருபோதும் சொன்னதில்லையேதாத்தா'

'ஆனால் நீ அப்படி யோசித்துக்கொண்டிருந்தாய்'
ஆகக் கடைசியில் அந்தப் பதுங்கு குழிக்குள் இருக்க முடியாதபடி தாத்தாவுக்குப் பசி முற்றியதுதுப்பாக்கியை எடுத்துச் சொருகிக்கொண்டு உணவுக்காக கிராமத்துக்குள் போக முடிவு செய்தார்கிராமத்தை அடைந்தபோது எல்லாமே மாறியிருப்பதைப் பார்த்தார்தேவாலயக் கோபுரத்தின் உச்சியில்  செங்கொடி படபடத்துக் கொண்டிருந்ததுதேவாலயம் மூடப்பட்டு சமூகக்கூடமாக மாற்றப்பட்டிருந்ததுமக்கள் எல்லாரும் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருந்தார்கள்அவர்களுடைய ஆழமான விழிகள் புதியதும் மகத்தானதும் உலகத்தையே மாற்றி விடக் கூடியதுமான ஏதோ ஒன்றால் ஒளிர்ந்தனதாத்தா முழந்தாளிட்டுச் சரிந்து அழுதார்.தாயகத்தின் மண்ணை முத்தமிட்டார்உடனடியாகக் கட்சியிலிருந்து அவருக்கு அழைப்பு வந்ததுஉடனடியாக உள்ளூர் நிர்வாகத்தில் அவருக்கு உயர்ந்த பதவியளிக்கப்பட்டதுஉடனடியாக அவர் ஏணிமேல் ஏறி வந்து  நகரத்துக்குள் நுழைந்து  இத்தியாதி இத்தியாதி துறையின் இத்தியாதி இத்தியாதியாக ஆனார்அவருக்கு ஒரு வீடு கிடைத்ததுபாட்டியைத் திருமணம் செய்தார்ஒரு வருடத்துக்குப் பிறகு அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது.

**********
அமெரிக்காவுக்குப் புறப்படுவதற்கு முன்பு ஒருநாள் தொலைபேசியில் அவரிடம் கேட்டேன். 'அப்படி மோசமான எதையெல்லாம் கடந்து வந்தீர்கள்உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கைதானே அமைந்திருந்திருக்கிறது'.

'முதலாளித்துவவாதிகளை நான் வெறுக்கிறேன்லெனினை நேசிக்கிறேன்என்றார்.

'என்னை நேசிக்கிறீர்களா?'

'நீ என் பேரனல்லவா?'

'அப்படியானால் நகரத்துக்கு வாருங்கள்என்னுடன் இந்த வீட்டிலிருங்கள்'

'நான் இங்கே செய்து முடிக்க வேண்டியவை ஏராளம்எனக்குப் பொறுப்புகள் இருக்கின்றனஎன்றார்.

'சுத்தப்படுத்தக் கல்லறைகள்தான் உங்களுக்கு இருக்கின்றன'


'என்னால் வர முடியாதுஎன்னால் முடியாதென்று உனக்கும் தெரியும்என்றார்.

'தெரியும்அதனால்தான் நான் போகிறேன்'

**********
1999 ஆம் வருடம் ஆகஸ்டு 11 தேதி நான் அர்கான்சாஸுக்கு வந்து சேர்ந்தேன்சூட் அணிந்த இரண்டு இளைஞர்களும் ஒரு பெண்ணும் என்னை அழைத்துச் செல்வதற்காக விமான நிலையத்துக்கு வந்திருந்தார்கள்சர்வதேச மாணவர் நலனில் அக்கறைகொண்ட ஏதோ அமைப்பிலிருந்து வந்திருந்தார்கள்என்னை அழைத்துச் செல்வதைப் பற்றி முன்கூட்டியே மின்னஞ்சல் செய்திருந்தார்கள்.

'அமெரிக்காவுக்கு நல்வரவுஎன்று இதமானதும் நட்பு நிரம்பியதுமான ஒரே குரலில் சொன்னார்கள்அவர்களுடைய முகங்கள் அழகானவை.உண்மையானவைநாங்கள் கைகுலுக்கிக் கொண்டோம்பிறகு காரில் போகும்போது ஒரு பைபிளை என்னிடம் தந்தார்கள்.
'
இது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?' நிதானமாகவும் அழுத்தமாகவும் அந்தப் பெண் கேட்டாள்.

'தெரியாதுஎன்றேன்நியாயமாகவே அவள் மகிழ்ச்சியடைந்ததுபோலத் தோன்றியது.

'நமது மீட்பரின் நற்செயல்கள்நமது தேவனின் வார்த்தைகள்'

'லெனினின் தேர்ந்தெடுத்த நூல்கள்தானேஇது எந்தத் தொகுதி?' என்றேன்.


சிறுவனாக இருந்தபோது என்னுடைய கோடைக் கால நாட்களை கிராமத்தில் தாத்தா பாட்டியுடன் கழிப்பதுதான் வழக்கம்குளிர்காலத்தில் அவர்கள் நகரத்தில் எங்கள் வீட்டிலிருந்து இரண்டு பிளாக்குகள் தள்ளி வசித்தார்கள்பருவ நிலையில் வெப்பமேறத் தொடங்கியதும் மூட்டை கட்டிக்கொண்டு கிராமத்துக்குப் போவார்கள்.

சில சமயங்களில் முழு நிலாப் பொழுதுகளில் தாத்தா என்னை கிராமீன் வேட்டைக்குக் கூட்டிக்கொண்டு போவார்கொல்லைபுறத்தில் உட்கார்ந்து பெரிய பைகளைத் தயார் செய்வதிலும் அவற்றின் அடிப்பாகத்தைச் செப்பனிடுவதிலும் கடந்த வேட்டைகளின்போது அவற்றில் விழுந்த ஓட்டைகளை ஒட்டிச் சரிசெய்வதிலும் நாள் முழுவதையும் கழித்தோம்கடைசியாக எல்லாவற்றையும் முடித்துவிட்டு முற்றத்தில் வந்து உட்கார்ந்து பால்கன் மலைத்தொடரின் சிகரங்களுக்குப் பின்னால் சூரியன் விழுவதைக் கவனித்தோம்தாத்தா ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தார்சின்னக் கத்தியை எடுத்தார்மீன்பிடிப்புக்காக வைத்திருந்த வாதுமைப் பட்டைகளில் கீறிக் காட்டினார்நிலா உதிப்பதற்காகக் காத்திருந்தோம்சில சமயங்களில் பாட்டி எங்களுடன் உட்கார்ந்து பாடினாள்அல்லது தாத்தா அவருடைய கம்யூனிஸ்ட் தோழர்களுடன் காட்டில் பதுங்கு குழிக்குள் ஒளிந்திருந்த நாட்களின் கதைகளைச் சொன்னார்.

கடைசியாக நிலா எழுந்து வெளிச்சத்துடன் ஒளிரத் தொடங்கியதும் தாத்தாவின் கால்கள் அரிக்கும்.'அவையெல்லாம்

மேய்ச்சலுக்கு வந்திருக்கும் நாம் போகலாம்என்பார்.

வழியில் சாப்பிடுவதற்காக பாட்டி சாண்ட்விச்சுகளை காகித நாப்கின்களில் பொதிந்து கொடுத்தாள்அதைப் பிரித்து எடுப்பது எப்போதுமே சிரமமாக இருந்ததுபாட்டி எங்களை வாழ்த்தியனுப்பினாள்வீட்டை விட்டிறங்கி காடுகளுக்கு இடையே மண்பாதையில் நடந்து கிராமத்தைவிட்டு வெளியேறினோம்பைகளையும்  தூண்டில் கழிகளையும் தாத்தா எடுத்திருந்தார்நான் அவரைப் பின் தொடர்ந்தேன்நிலா எங்கள் வழியைப் பிரகாசமாக்கியதுகுளிர்ந்த காற்று எங்கள் முகத்தில் இதமாகப் படர்ந்ததுபக்கத்தில் எங்கோ ஆறு கலகலத்துக்கொண்டிருந்தது.

நாங்கள் காட்டைத்தாண்டி வெளியே சமவெளிக்கு வரவேண்டும்அப்போது எங்களுக்கு மேலே கட்டவிழ்ந்து இரவு நேர வானம் விரிவதைப் பார்க்க முடியும்ஆறும் கிராமீன்களும்ஆறு எப்போதும் இருண்டிருக்கும்குமுறிக்கொண்டிருக்கும்மீன்கள் எப்போதும் கரையோரப் புல்வெளிகளில் மேய்ந்து கொண்டிருக்கும்.

நாங்கள் புல்மீது உட்கார்ந்து சாண்ட்விச்சுகளை எடுத்துத் தின்போம்உச்சமான நிலா வெளிச்சத்தில் கிராமீன்களின் ஈர உடல்கள் கனன்றெரியும் நிலக்கரிபோல மின்னிக்கொண்டிருக்கும்இரு கரைகளும் எரியும் அனல்துண்டுகளால் போர்த்தப்பட்டதுபோலத் தெரியும்அவற்றின் சின்னக் கண்கள் இருட்டில் எங்களைக் கவனித்துக்கொண்டிருக்கும்சாப்பிட்டு முடிந்ததும் வேட்டையைத் தொடங்குவோம்.

தாத்தா தூண்டில் கழியையும் பையையும் என்னிடம் தருவார்நூற்றுக்கணக்கான கிராமீன்கள் எங்கள் உள்ளங்கால்களை சுரண்டிக்கொண்டிருக்கும்அவற்றின்  கொடுக்குகளை கழியால் தொடுவோம்.சீண்டுவோம்அவை எவ்வளவு முடியுமோ அவ்வளவு பலமாக கழியைக் கவ்விக்கொள்ளும்அவற்றை அப்படியே தண்ணீரிலிருந்து எடுத்து பைக்குள் உதறக் கற்றுக்கொண்டேன்ஒவ்வொன்றாகச் சேகரித்தால் போதுமென்று தாத்தா அடிக்கடி சொல்வார் .

''அவையெல்லாம் எளிதில் மாட்டிக்கொள்ளக் கூடிய இரைகள்நீ ஒன்றை பிடித்தால்கூட மற்றவை ஓடிப் போகாதுநீ கழியை தண்ணீரிலிருந்து எடுக்கும்வரைக்கும்கூட நீ அங்கே இருக்கிறாய் என்பது அவற்றுக்குத் தெரியாதுஅப்புறமும் கூடத் தெரியாதுமனித சுபாவத்தைப் பற்றிய பாடத்தை அவை நமக்குக் கற்றுக்கொண்டுக்கின்றனஇல்லையா?'' அது  என்ன பாடமென்று புரிந்துகொள்ளக் கூடிய வயதில்லை எனக்குஎனவே அதைக் கேட்டுக்கொள்வேன்வேட்டையாடுவேன்.

ஒன்று இரண்டு மூன்று மணிநேரங்கள்நிலா களைத்துப் போய்த் தொடுவானத்தை நோக்கி நீந்துகிறதுகிழக்குத் திசை அனல் சிவப்பாக ஒளிர்கிறதுகிரா மீன்கள் முழு ஒத்திசைவுடன் திரும்பி மெதுவாகவும் அமைதியாகவும் நதியை நோக்கி நகர்கின்றனநதி அவற்றின் குளிர்ந்த முரட்டு உடல்களைத் திரும்ப எடுத்துக்கொண்டு ஒரு புதிய நாளின் தாலாட்டுக்குள் உறங்கச் செய்ததுநாங்கள் புல்தரையில் உட்கார்ந்திருந்தோம்எங்கள் பை இரைகளால் நிரம்பியிருந்ததுநான் தாத்தாவின் தோளில் சாய்ந்து தூங்கிப்போனேன்அவர் என்னை தூக்கிக்கொண்டு கிராமத்தை நோக்கி நடந்தார்.

கிரா மீன்கள் எல்லாவற்றையும் ஆற்றோடு போக விட்டார்.


என்னுடைய இருப்பிடத்திலிருந்து தாத்தாவை அழைத்தேன்நீண்ட நேரம் தொலைபேசித் தொடர்பே கிடைக்கவில்லைஆனால் இணைப்பு இடையே முறிந்தபோது மறுமுனையில் தாத்தாவின் குரல் கேட்டது.

''பேரனே?''

''நான் இங்கே தான் இருக்கிறேன்''

'' நீ அங்கேதன் இருக்கிறாய்''  அவருடைய குரல் அடங்கியதாகவும் தணிவானதாகவும் இருந்ததுஅதன் எதிரொலி நாங்கள் ஏதோ சுரங்கத்தின் இரு முனைகளில் நின்றிருப்பதுபோலக் கேட்டது.

''எப்படி இருக்கிறாய்?'' என்றார் அவர்.


''தூங்கப் போகிறேன்சரிஎன்னுடைய விடை பெறல் கார்டு கிடைத்ததா?''

''அதை பன்றிகளுக்குத் தீனியாகப் போட்டு விட்டேன்அமெரிக்கப் பணத்தைப் போன்ற பன்றிகளுக்கு''

எங்களுக்கிடையில் தொடர்பு அறுபட்டு காற்று அலைமோதியது.

''தாத்தாநமக்கு நடுவில் ஏராளமான வெள்ளம் இருக்கிறதுநான் அவ்வளவு விலகியிருக்கிறோம்''

''ஆமாம்விலகித்தான் இருக்கிறோம்ஆனால் சமுத்திரத்தை விட ரத்தம் அடர்த்தியானது என்று நான் நம்புகிறேன்'' என்றார்.

**********

அவருக்கு முப்பது வயதும் இத்தியாதி இத்தியாதிப் பதவியும் கிடைத்தபோதுதான்  தாத்தா தன்னுடையை மனங்கவர்ந்தவளைச் சந்தித்தார்அது ஒரு செவ்வியல் கம்யூனிஸ்ட் காதல் கதையாக இருந்ததுகட்சியின் மாலை நேரக் கூட்ட மொன்றில் அவர்கள் முதன்முதலாகச் சந்தித்தார்கள்பாட்டி தாமதமாக வந்திருந்தாள்மழையில் நனைந்திருந்தாள்தாத்தாவுக்குப் பக்கத்தில் காலியாகக் கிடந்த இருக்கையில் உட்கார்ந்து அவருடைய தோளில் சாய்ந்து தூங்கிப் போனாள்அந்த நொடியில்  கட்சி நடவடிக்கைகளில் அவள் காட்டுகிற அரை குறை ஆர்வத்தை வெறுத்தார்அந்த நொடியில் அவளுடைய வாசனையையும் அவளுடைய முகத்தையும்  தன்னுடைய கழுத்தில் படர்ந்த அவளுடைய சுவாசத்தையும் அவர் காதலித்தார்அதன் பிறகு அவர்கள் இலட்சியங்கள் பற்றியும்  ஒளிமயமான எதிர்காலம் பற்றியும் பேசினார்கள்மேற்கத்திய முதலாளியத்தின் தீமை பற்றியும் சோவியத் யூனியனை ஆதரிப்பது பற்றியும் மிக முக்கியமாக லெனினைப் பற்றியும் பேசினார்கள்இருவரும் ஒரே ஆசையைப் பங்கிட்டுக் கொள்வதையும் விஷயங்களை ஒரே கண்ணோட்டத்தில் நன்றியுணர்வுடனும் போற்றுதலுடனும் அணுகுவதையும் தாத்தா கண்டு பிடித்தார்எனவேஅடுத்த நாள் காலை பாட்டியை  சிவில் அலுவலகத்துக்கு அழைத்துப் போய்த் திருமணம் செய்துகொண்டார்.

பல்கேரியாவில் கம்யூனிசம் அகற்றப்பட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு 1989 இல் பாட்டி மார்பகப் புற்று நோயால்இறந்து போனாள்அப்போது எனக்கு எட்டு வயதுஆனாலும் எல்லாவற்றையும் தெளிவாக நினைவு கூர முடிகிறதுபாட்டியை அவளுடைய சொந்த கிராமத்தில் அடக்கம் செய்தோம்அவளுடைய சவப் பெட்டியை ஒரு வண்டியில் வைத்தோம்அதை ஒரு டிராக்டருடன் சேர்த்துக் கட்டினோம்.  வண்டியையும் சவப்பெட்டியையும் டிராக்டர் இழுத்துப் போக நாங்கள் எல்லாரும் அதன் பின்னால் போனோம்தாத்தா வண்டிக்குள்ளே சவப்பெட்டிக்குப் பக்கத்தில் பாட்டியின் இறந்த கையைப் பிடித்தபடி உட்கார்ந்திருந்தார்அன்றைக்கு மழை பெய்ததாகத் தெரியவில்லைஆனால் என்னுடைய  நினைவுகளில் மழையையும் மேகங்களையும் காற்றையும் உணர்கிறேன்எனக்குள்ளே மழை பெய்திருக்க வேண்டும்உங்கள் மனதுக்கு நெருக்கமானவர்களை இழந்து விடும்போது பெய்யும் அதே நிதானமான குளிர் மழைதாத்தாவுக்குள்ளும் அந்த மழை பெய்திருக்கவேண்டும்இருந்தும் அவர் கண்ணீர் சிந்தவில்லைஅவர் வண்டிக்குள்ளேஉட்கார்ந்திருந்தார்எனது நினைவுகளின் மழை அவர் மேல் பொழிந்து கொண்டிருந்ததுஅவருடைய வழுக்கைத் தலை மீதும் திறந்த சவப் பெட்டி மீதும்  பாட்டியின் மூடிய கண்கள் மீதும் பொழிந்து கொண்டிருந்ததுஅவர்களைச் சுற்றி  ஒபெயேவும் டிரம்பெட்டும் ஈம முரசும் இழைந்த ஆழ்ந்த துக்ககரமான இசை பெருகிக் கொண்டிருந்ததுகம்யூனிஸ்டின் இறுதிச் சடங்குக்கு புரோகிதர்  தேவையில்லைஎனவே பாட்டியை கல்லறையில் அடக்கியபோது புரோகிதர் இல்லாமலிருந்தார்லெனினின் தேர்ந்தெடுத்த நூல்களின் பன்னிரண்டாவது தொகுதியிலிருந்து சில பகுதிகளைத் தாத்தா வாசித்தார்அவருடைய சொற்கள் ஆகாயம் வரை உயர்ந்தனமழை அந்தச் சொற்களை மோதி ஈரச் சிறகுகளைப் போல தரையை நோக்கித் தள்ளியதுஅவை  உறுமும் அருவிபோல கல்லறைக் குழியின் விளிம்புகளிலிருந்து ஓடி சேற்றுக் கலங்கலான நதிகளாகப் பெருக்கெடுத்தன.

எல்லாம் முடிந்ததும் தாத்தா சொன்னர் : ''நல்ல இடுகுழிபதுங்கு குழியைப் போல அவ்வளவு இடுங்கியதல்லஇல்லையாரொம்ப இடுங்கியதல்லஇல்லையாஅதற்குள்ளே அவள் வசதியாக இருக்கலாம்இல்லையாவசதியாக இருப்பாள்நிச்சயம் வசதியாக இருப்பாள்''

பாட்டியின் இறுதிச் சடங்கு முடிந்த பிறகு தாத்தா கிராமத்தை விட்டு நகர மறுத்து விட்டார்ஒரே வருடத்துக்குள் ஒரு மனிதன் இழக்கக் கூடிய எல்லாவற்றையும் அவர் இழந்தார்தன்னுடைய மனங்கவர்ந்தவளை இழந்தார்தன்னுடைய வாழ்வின் காதலான கம்யூனிஸ்ட் கட்சியை இழந்தார்.

''நகரத்தில் எனக்கு என்ன வாழ்க்கை இருக்கிறது? '' என்று அப்பாவிடம் சொல்லிக்கொண்டிருந்தது எனக்கு ஞாபகமிருக்கிறது. ''இந்த துரோகிகளுக்குச் சேவை செய்ய எனக்கு விருப்பமில்லைஇந்த வேசி மகன்களை,அப்பாவிப் பெண்களைக் கொன்றவர்களை முதலாளித்துவம் நாசமாக்கட்டும்''.
கம்யூனிசத்தின் வீழ்ச்சிதான் பாட்டியைக் கொன்றது என்பதில் தாத்தா உள்ளுக்குள்ளே உறுதியாக இருந்தார்.

''அவளுடைய சுத்தமான இலட்சிய வேட்கையுள்ள இதயத்தில் ஏற்பட்ட அதிருப்தியின் விளைவுதான் அவளுடைய புற்றுநோய்'' என்று விளக்கம் சொல்லுவார். ''அவளுடைய இலட்சியங்கள் கவிழ்க்கப்படுவதை அவளால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லைஅவளைப் போன்ற நேர்மையான ஒரு பெண்மணி செய்யச் சாத்தியமானதை அவள் செய்தாள்இறந்து போனாள்''.

பாட்டியின் அருகிலேயே இருக்க வேண்டுமென்பதற்காகவே தாத்தா கிராமத்தில் ஒரு வீட்டை வாங்கினார்நாள் தோறும் பிற்பகல் மூன்று மணிக்கு பாட்டியின் கல்லறைக்குப் போனார்அதன் அருகில் உட்கார்ந்தார்.  லெனினின் தேர்ந்தெடுத்த நூல்கள் - பன்னிரண்டாவது தொகுதியைத் திறந்து உரக்க வாசித்தார்கோடைக் காலமோ குளிர் காலமோ  அவர் அங்கே உட்கார்ந்து வாசித்தார்ஒருநாளைக் கூடத் தவற விட்டதில்லைஅங்கேதான்பாட்டியின் கல்லறை அருகேதான் அவருக்கு அந்த யோசனை தோன்றியது.

ஒரு சனிக்கிழமை அவரைப் பார்க்க வந்திருந்தபோது  என்னிடமும் என் பெற்றோரிடமும் சொன்னார்''எதையும் இழந்துவிடவில்லைஇந்த நாடுகளில் கம்யூனிசம் செத்துப் போயிருக்கலாம்ஆனால் அதன் இலட்சியங்கள் ஒருபோதும் சாவதில்லைநான் அதையெல்லாம் இங்கே இந்த கிராமத்துக்குக் கொண்டு வரப் போகிறேன்எல்லாவற்றையும் முதலிலிருந்து  கட்டியெழுப்பப் போகிறேன்அதன் மூலம் உன் பாட்டியின் கனவு நிறைவேறும்உன் பாட்டி என்னைப் பற்றிப் பெருமைப் படுவாள்''.
1993 பத்தாம் மாதம் இருபத்தி நான்காம் தேதி மகத்தான அக்டோபர் கிராமப் புரட்சி நடந்ததுஅமைதியாகவும் தலை மறைவாகவும் அதிக ஆர்ப்பாட்டமில்லாமலும் நடந்ததுஅந்த சமயத்தில் அறுபது வயதானவர்களும் அல்லது அதை விட குறைந்த வயதானவர்களும்  ஏற்கனவே கிராமத்தை விட்டு வாழ்வதற்காக நகரத்துக்குப் போய் விட்டிருந்தார்கள்ஆக அப்பாவிகளும் மன உறுதியுள்ளவர்களும் அங்கே மிஞ்சியிருந்தார்கள்அவர்களிடையே அந்த இலட்சியம் இன்னும் வாழ்ந்து கொண்டிருந்தது.  மகத்தானதும் உலகத்தையே மாற்றி விடக் கூடியதுமான ஏதோ ஒன்று  அவர்களுடைய ஆழ்ந்தவிழிகளில் ஒளிர்ந்தனகிராமம் அதிகாரபூர்வமாக இன்னும் பல்கேரியாவின் ஒரு பகுதியாகத்தான் இருந்ததுதேசிய அரசாங்கத்துக்குக் கட்டுப்பட்ட மேயரும் இருந்தார்அரசாங்கம் தான் கிராமத்தை நிர்வாகம் செய்ததுஆனால் ரகசியமாகவும் தலைமறைவாகவும் புதிய கம்யூனிஸ்ட் கட்சிதான் கிராமத்தின் விதியைத் தீர்மானித்ததுகிராமத்தின் பெயர் லெனின்கிராடு என்று மாற்றப்பட்டதுதாத்தா ஏகமனதாக அதன் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்ஒவ்வோரு மாலையும் கிராமத்தின் பழைய கூடத்தில் கட்சிக் கூட்டம் நடக்கும்.  தாத்தாவுக்குப் பக்கத்து இருக்கைஎப்போதும் காலியாகவே விடப்படும்.  வெளியே மழை பெய்வதுபோன்ற பிரமையை உருவாக்குவதற்காக குழாய் மூலம்  ஜன்னல் கண்ணாடிமேல் தண்ணீர் ஊற்றப்படும்.

ஜன்னல்மேல் தண்ணீர் விடும் முடிவைப் பற்றி கட்சி உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியபோது ''ஈரப் பதத்தில் கம்யூனிசம் நன்றாகத் தழைக்கும்'' என்று விளக்கம் சொன்னார் தாத்தாஉண்மையில் அவர் பாட்டியைப் பற்றியும் அவர்களுடைய முதல் சந்திப்பின்போது பெய்த மழையையும் பற்றித்தான் யோசித்துக்கொண்டிருந்தார்ஆனால் லெனின்கிராடில் கம்யூனிசம் நிச்சயமாகவே தழைத்தது.

தாத்தாவும் கிராமவாசிகளும் பல்கேரியாவில் மிஞ்சியிருக்கும் எல்லாக் கம்யூனிஸ்ட் கலைப் பொருட்களையும் மீட்டு லெனின்கிராடுக்கு - கம்யூனிஸ்ட் அறிக்கையின் வாழும் அருங்காட்சியத்துக்குக் - கொண்டு வந்து விடத் தீர்மானித்தார்கள்சிவப்பு இலட்சியத்தில் ஊன்றியிருந்த எல்லா நினைவுச் சின்னங்களும் நாடு முழுவதும் தகர்க்கப் பட்டிருந்தனபதிற்றாண்டுகளுக்கு முன்பு திட்பமானவையாகவும் மகோன்னதப்படுத்துபவையாகவும் நம்பிக்கையூட்டக் கூடியவையாகவும் நிறுவப்பட்டிருந்த சிலைகளெல்லாம் இன்று பெயர்க்கப்பட்டு பழைய உலோகமாக உருக்கப்பட்டனமுன்பு கொண்டாடப்பட்ட கவிஞர்கள் இன்று மறக்கப்பட்டார்கள்அவர்களுடைய காகித உடல்களில் புழுதி படிந்தனஅவர்களுடைய உதிர மை மழை நீரால் கழுவப்பட்டது.

மீட்புப் பணியைச் செய்துதர ஒரு நாடோடிக் கூட்டத்தை கிராமவாசிகள் சம்மதிக்க வைத்திருப்பதாக எனக்கு எழுதிய கடிதத்தில் தாத்தா தெரிவித்திருந்தார். ''தோழர் ஹசன்அவர் மனைவிஅவர்களுடைய பதின்மூன்று நாடோடிப் பிள்ளைகள் எல்லாரும் பிரகாசமான கம்யூனிஸ்ட் இலட்சியங்களால் ஈர்க்கப் பட்டிருக்கிறார்கள்என்ன,  கொஞ்சம் காசுக்கு ஆசைப்படுகிறார்கள்நாங்கள் இரண்டு பன்றிகளைக் கொடுத்தோம்நம்முடைய இரங்கத் தகுந்த நாட்டில் பார்க்கக் கிடைக்கிற எல்லா சிவப்பு கலைப் பொருட்களையும் கிராமத்துக்குக் கொண்டுவந்து சேர்ப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறார்கள்இன்று நாடோடித் தோழர்கள் அவர்களுடைய முதல் பரிசை எங்களிடம் கொண்டு வந்தார்கள்பெயரற்ற ரஷ்யச் சிப்பாயின் நினைவுச் சின்னம்துருக்கியர்களிடமிருந்து விடுதலை பெற்றவர்சிலை இடுப்புக்குக் கீழே கொஞ்சம் சிதைந்திருகிறதுஒரு துப்பாக்கி காணாமற் போயிருக்கிறதுமற்றபடி நல்ல நிலையிலிருக்கிறதுஇப்போது அந்தச் சிலை அல்யோஷாசெர்யோஜாமின்ஸ்கைச் சேர்ந்த பெயரற்ற பணிப்பெண் ஆகியவர்களின் சிலைகளுக்கு அருகில் கம்பீரமாக நிற்கிறது''.

**********

அமெரிக்க வாழ்க்கை நன்றாகவே இருந்ததுநான் வகுப்புகளுக்குப் போனேன்படித்தேன்புதிய நண்பர்களைஏற்படுத்திக்கொண்டேன்.  நான் தாத்தாவுக்குக் கடிதங்கள் எழுதினேன்அல்லது பல்கேரியாவில் விடியற்காலையாக இருக்கும்போது  அவர் விழித்திருப்பாரென்றும் நாற்காலியில் உட்கார்ந்திருப்பாரென்றும் லெனினை வாசித்துக் கொண்டிருப்பாரென்றும் தெரியுமென்பதால் தொலைபேசியில் அழைத்துப் பேசினேன்மறுபடியும் கெட்ட கனவுகள் காண ஆரம்பித்திருந்தேன்கார் என் தலைமேல் ஏறி ஏறி இறங்குவதாகக் கனவு கண்டு அலறியடித்து விழித்தேன்மறுபடியும் தூங்கியபோது பாட்டி வந்து என் படுக்கையில் உட்கார்ந்துநான் காய்ச்சலில் விழுந்துவிடும் போதெல்லாம் செய்திருந்ததுபோலஎன் நெற்றியை வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தாள். ''உன் தாத்தா செத்துக் கொண்டிருக்கிறார்'' என்று எச்சரித்தாள். ''அவரை சீக்கிரமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்அப்புறம்என் கண்ணேதயவுசெய்து அடுத்த முறை நீ அவரோடு பேசும்போது என் கல்லறையில் லெனினை வாசிப்பதை நிறுத்தச் சொல்''.
**********

தாத்தா அமெரிக்கர்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பினார்அப்படியானால் ஏதாவது புத்தகத்தைப் படிப்பதுதானே,
'
'என்னால் மனிதர்களை ஆராய்ச்சி செய்ய முடியாதுதப்பான முடிவுகளையே எடுப்பேன்'' என்றேன்.

''பிறகு எதற்காக உளவியல் படிக்கிறாய்?''

அதனால் அமெரிக்கர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று விளக்க முயற்சி செய்தேன். ''அவர்கள் வித்தியாசமானவர்கள்நாளைக்கு என்ன சாப்பிடப் போகிறோமென்றோ நாளைக்கு மேஜைமீது உணவு இருக்குமா வென்றோ அவர்கள் யோசிப்பதில்லைஇவையெல்லாம் அவர்கள் வரையில் முடிந்து போய்விட்ட பிரச்சனைகள்நடப்பது போலநடை ஒரு முடிந்து போன பிரச்சனை என்று நாம் படித்திருக்கிறோம்பரிணாமம் அதை அக்கறையாகத்  தீர்த்து விட்டதுஇனிமேல் ஒவ்வொருவரும் எப்படி நடக்க வேண்டுமென்று வகைப் படுத்திக்கொள்ளத் தேவையில்லைஇந்தத் தகவலை சரியாகச் செயல்படுத்த மூளைக்கு ஒரு வருடம் போதுமானதாக இருந்ததுஅப்புறம் புரிந்து கொண்டதுநீங்கள் காலால் நடக்கிறீர்கள்இங்கே மக்களுக்கு வேறு பிரச்சனைகள்வேறு விஷயங்களைப் பற்றித்தான் கவலைப்படுகிறார்கள்'' என்று எழுதினேன்.

கடிதம் கிடைத்த பிறகு தொலைபேசி மூலம் ''என்ன சொல்ல வருகிறாய்?'' என்று கேட்டார் தாத்தா.

''எனக்குத் தெரிந்த இந்தப் பெண்ணை எடுத்துக் கொள்ளுங்கள்சமந்தாஒரு மாதமாக மிகவும் மனச் சோர்வுடன் இருக்கிறாள்அவள் அப்பா அவளுக்கு தானியங்கியான  கியரில்லாத ஒரு பிஎம்டபிள்யூ காரைக் கொடுத்தார்என்னால் அதை ஓட்டவே முடியாதுஅது கொடுமையாக இருக்கிறதுநான் செத்துப் போகப் போகிறேன் என்று அழுகிறாள்''

''அது கொடுமைதான்'' என்றார் தாத்தா.

''ஆனால் வேறு சிலரின் பிரச்சனைகள் நம்முடையவைபோலத்தான்என்னுடைய அறை நண்பனின் பெற்றோர் மணவிலக்குச் செய்துகொள்ளப் போகிறார்கள்இருபது வருடங்களாக ஒன்றாக இருந்தவர்கள்ஒரு நாள் காலையில் இனிமேல் ஒரே படுக்கையில் விழித்து எழ வேண்டாம் என்று முடிவு செய்து விட்டார்கள்.

மறுமுனையில் தாத்தா இருமினார்.

''ஏழு வருடங்களுக்கு முன்பு இந்த நாளில்தான் உன் பெற்றோர்கள் காலமானார்கள்'' என்றார்.

''தெரியும்என்னுடைய காலண்டரில் குறித்து வைத்திருக்கிறேன்'' என்றேன்.


எனக்கு பன்னிரண்டு வயதாவதற்கு ஒரு வாரம் முன்பு என்னுடைய பெற்றோர்கள் இறந்தார்கள்அவர்கள் எனக்கு ஒரு சைக்கிளைப் பரிசளிப்பதாக இருந்தார்கள்வீட்டின் தரைத்தளத்தில் அதை மறைத்து வைத்திருந்ததை நான் பார்த்திருந்தேன்.  தோல் இருக்கையும் டைனமோவால் எரியும் இரண்டு முகப்பு விளக்குகளும் கொண்ட ஒரு வெள்ளை நிற பி.எம்.எக்ஸ்அம்மா ஏற்கனவே வாழ்த்து அட்டை எழுதி உறையை சைக்கிளில் சொருகியிருந்தாள்.

''எங்கள் அன்பான பையனுக்குநீ கீழே விழுந்து முட்டியை சிராய்த்துக்கொள்ளும்போது எங்களை நினைத்துக்கொள்'' என்று அட்டையில் இருந்தது.

அவர்கள் இறந்துபோன அந்த இரவை இப்போது நடந்ததுபோல என்னால் ஞாபகப்படுத்திக்கொள்ள முடிகிறது.தொலைபேசி ஒலித்தபோது அதிகாலை இரண்டரை மணியாக இருந்ததுஅப்பா தொலைபேசியை எடுத்து சற்று நேரம் பேசினார்அவருடைய சோகமான முணுமுணுப்பால் விழித்தேன்மறுபடியும் தூக்கத்துக்குள் ஊர்ந்தேன்மறுபடியும் விழித்தேன்அம்மா அப்பாவின் கையைப் பற்றியபடி சோபாவில் அவர்  அருகில் உட்கார்ந்திருந்தாள்இருவரும் நீல இருளில் குளித்தவர்கள்போல இருந்தார்கள்தசை நிழல்கள்போலத் தோன்றினார்கள்.

கடைசியாக அப்பா சொன்னார்.'' நன்றி டாக்டர்நாங்கள் வந்து கொண்டிருக்கிறோம்''

அம்மா என் படுக்கையில் வந்து உட்கார்ந்தாள்பயத்தால் நடுங்கிக் கண்களை இறுக மூடிக்கொண்டேன்.

''மிஷேஎழுந்திரு'' என்றாள்.

''தாத்தாவா?'' என்று கேட்டேன்அம்மா  குனிந்து  நெற்றியில் முத்தமிட்டாள்.

''அவருக்கு மாரடைப்பாம்ஆனால் இப்போது நன்றாக இருக்கிறார்எல்லாரும் சேர்ந்து கிராம மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்'' என்றாள்.

''செத்துப் போய் விடுவாரா?''

அப்பா வந்து என்னை முத்தமிட்டார்அவருடைய கண்கள் தெரு விளக்குகளின் வெளிச்சத்தில் மின்னினஎன்னைப் போர்வையுடன் அப்படியே சுற்றி தூக்கிக்கொண்டு கதவைத் தாண்டினார்நாங்கள் நெடுஞ்சாலையை அடைந்தபோது நான்கு மணி ஆகியிருந்ததுஒரு மணிநேரத்துக்குப் பிறகு அவர்கள் இறந்தார்கள்.

**********

என்னால் ஞாபகப்படுத்திக்கொள்ள முடிவதெல்லாம் எங்களுக்கு நேராக வந்த லாரியின் பிரகாசமான வெளிச்சத்தை மட்டுமேகார் சாலையிலிருந்து விலகி உருண்டதுமோதல்பிறகு இருட்டு.

என் மார்பில் குழாய்களுடன் விழித்தேன். ''அம்மாஅப்பா?'' என்று கேட்டேன்.

''சின்கோஎன் மகனேவிழித்து விட்டாய்'' என்று கேட்டதுஎங்கிருந்தோ தாத்தா தோன்றினார்என் முன்னால் நின்று  அழுதுகொண்டிருந்தார்.

''நீ  விழித்து விட்டாய்விழித்து விட்டாய்'' என்று திரும்பத் திரும்பச் சொல்லிகொண்டிருந்தார்.

டாக்டர்கள் வந்தார்கள்நர்ஸுகள் வந்தார்கள்அவர்கள் எல்லாரும் ஆச்சரியமடைந்திருந்தார்கள்அவர்கள் எல்லாரும் நான் விழித்துக் கிடப்பதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்திருந்தார்கள்.
''தாத்தாஅம்மா எங்கே?''

''சின்கோ,  நீ  விழித்து விட்டாய்'' திரும்பத் திரும்பச் சொல்லிகொண்டிருந்தார் தாத்தா .


ஒரு வாரத்துக்குப் பிறகு புதிய சமாதியைப் பார்க்க என்னை இடுகாட்டுக்கு அழைத்துப் போனார்மண் மேடாகக் குவிக்கப்பட்டிருந்ததுகறுத்திருந்ததுஈரமாக இருந்ததுஎன்  பெற்றோர்கள் ஒரே இடுகுழியில் புதைக்கப்பட்டிருந்தார்கள்அவர்களுக்குப் பக்கத்தில் பாட்டி கிடந்தாள்.

''தாத்தா நீங்கள் பொய் சொல்கிறீர்கள்'' என்றேன்மரச் சிலுவைமேல் பொறித்திருந்த என் பெற்றோரின்பெயர்களை உற்றுப் பார்த்தேன். ''நீங்கள் ஒரு புளுகர்''

ஒரு கையை என் தோள்மீது வைத்தார் அவர் .

''இறுதி சடங்கை நீ தவற விட்டதில் எனக்கு மகிழ்ச்சி''

''புளுகர்'' என்று முணுமுணுத்தேன்மண்டியிட்டு உட்கார்ந்து என் உள்ளங்கைகளால் மண்ணைப் பறித்தேன்திரும்பி அதை அவர் முகத்தில் எறிந்தேன்பிறகு அவரைக் கட்டியணைத்துக்கொண்டேன்.

**********
கல்லூரியில் என்னுடைய இரண்டாம் வருடம்எங்களுடைய தொலைதூர அழைப்பு வேளையொன்றில் தாத்தாஎன்னிடம் கேட்டார். '' பேயைப் பற்றி உனக்கென்ன தெரியும்?''

''என்ன?''

'' பேஅதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா? ''

''ஆமாம்நிச்சயமாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்  தெரியும்ஆனால் ஏன்?''

''தோழர் ஹசன் ஆராய்ச்சி செய்திருக்கிறார்சுவாரசியமான சில விஷயங்களைக் கண்டு பிடித்திருக்கிறார்''என்று விளக்கினார் தாத்தாயாரோ லெனினின் சடலத்தை  பே மூலம் விற்பதாகத் தெரிகிறது.

'' பேயில் லெனின்?'' ஒரு கணம் தொண்டை வரண்டது. ''தாத்தா உங்களுக்குப் பைத்தியமா?''

''அது தேவையில்லாத விஷயம்'' என்றார்இன்று கட்சி உன்னுடைய உதவியை நாடுகிறதுவிளாதிமிர் இலியீச்சை லெனின்கிராடுக்குக் கொண்டு வர நீ உதவ வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்''

'' நீங்கள் என்னைச் சீண்டுகிறீர்கள்உங்களால்...''

''விற்பனையாளருக்குத் தேவை ஒரு கடனட்டைவிசாவோ  மாஸ்டர் கார்டோ அல்லது டிஸ்கவரோ?கிராமத்தில் எங்களில் யாரிடமும் இதில் எதுவும் கிடையாதுஅதனால்தான் உன் உதவியைக் கேட்கிறோம்ஆராய்ச்சி செய்நாளைக்கு என்னைக் கூப்பிடு''

நான் என் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து இண்டெர்நெட் பிரௌசரைத் திறந்தேன்பிறகு மூடி விட்டேன்பிறகு மறுபடியும் திறந்து  பேயைத் தேடினேன். 'லெனின்என்று தட்டச்சு செய்து தேடு பொறியைச் சொடுக்கினேன். 430  இனங்கள்அஞ்சல் அட்டைகள்பாட்ஜுகள்டி ஷர்ட்டுகள்தாத்தா எதைச் சொன்னார்?மார்பளவுச் சிலையையாதொப்பியையாஅல்லது ஒட்டுத் தாடியையாவிண்டோசை மூடுவதற்குத் தயாராக்கிக் கொண்டிருந்தபோது அதைப் பார்த்தேன்சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவனர் லெனின்பதப்படுத்திய நிலை. 'சீரிய ஏலமெடுப்பவர்களுக்கு மட்டுமே'.

அந்த இணைப்பைத் தொடர்ந்துபோய் அந்தப் பக்கம் பதிவிறங்கக் காத்திருந்தேன்உள்ளடக்கத்தை உரக்க வாசித்தேன்.

''விளாதிமீர் இலியீச் லெனினின் சடலத்தை ஏலம் கோரியிருக்கிறீர்கள்.  உடல் நல்ல நிலையில் உள்ளது.அமெரிக்க வெப்பநிலையிலும் ஐரோப்பிய வெப்பநிலையிலும் இயங்கும்  குளிரூட்டிய சவப்பெட்டியில் அனுப்பப்படுகிறதுசீரிய ஏலமெடுப்பவர்களுக்கு மட்டுமேவாங்கிய உடன் தொகையைச் செலுத்தவும்.''

பொருள் வைத்திருக்கும் இடம் மாஸ்கோ என்று குறிப்பிடப்பட்டிருந்ததுஉலகம் முழுவதும் சரக்கு அனுப்பப்படும்விற்பனையாளர் பற்றிய தகவல்களைப் பரிசோதித்தேன்பின்னூட்டம் எதுவுமில்லைவேறு ஏலம் நடந்ததாகவும் தெரியவில்லைநிச்சயமாக இது ஒரு புரட்டுஏலம் பற்றிய தகவல் பக்கத்துக்குத் திரும்ப வந்தேன்மேலும் ஓரிரு முறை அதை வாசித்தேன்இதுவரையிலும் யாரும் ஏலம் கேட்டிருக்கவில்லைஆரம்பத் தொகை 1.99 டாலராக நிர்ணயிக்கப்பட்டிருந்ததுநான்  ஐந்து டாலருக்கு ஏலம் கேட்டு அதற்கான பித்தானை அமுக்கினேன்பழைய பக்கம் மறைந்து புதிய பக்கம் பதிவிறங்கியது. 'பொருள் முன்பதிவு''என்றிருந்ததுவாழ்த்துக்கள்கம்யூனிஸ்ட்போலி _ 1944. நீங்கள் லெனினை விலைக்கு வாங்கியிருக்கிறீர்கள்''


மறுநாள் தாத்தாவைக் கூப்பிட்டேன்.

''உங்களுடைய முட்டாள் லெனினுக்காக பத்து டாலர்கள் வீணடித்திருக்கிறேன்உங்களுக்கு சந்தோஷமென்று நினைக்கிறேன்'' என்றேன்.

''பேரா?''

''ஆமாம்நான் அவரை வாங்கி விட்டேன்சடலத்துக்கு ஐந்து டாலர்அனுப்புகிற செலவுக் கட்டணம் ஐந்து டாலர்உங்களுடைய கிராமத்து முகவரியைத்தான் கொடுத்திருக்கிறேன்''

''அப்படியென்றால் ஒரு நினைவு மண்டபத்தை நாங்கள் கட்ட வேண்டும்உடனே கட்டவேண்டும்''
' 'தாத்தாஇது ஒரு புரட்டுஒரு வேடிக்கைலெனினை விற்கவோ வாங்கவோ யாருக்கும் உரிமையில்லை''

''நாங்கள் கட்டுவோம்''

''நான் என்ன சொல்கிறேன் என்பதையாவது கேட்கிறீர்களா?''

''ஒரு நினைவு மண்டபம்சதுக்கத்தில்அதற்கு வண்ணம் பூச வேண்டும்ஆமாம் சதுக்கத்தை சிவப்பாக்க வேண்டும்''

''தாத்தாநிறுத்துங்கள்"'

அவர் நிறுத்தினார்பிறகு சொன்னார். ''பேரனேகவனிசமாதிகளைச் சுத்தம் செய்து களைத்துப் போய் விட்டேன்சமீப காலமாக கடுமையான தலைவலி வருகிறதுஎன்னுடைய வலது கை மரத்துப் போய் சும்மா தொங்குகிறதுகால்களில் குத்தலும் குடைச்சலுமாக உணர்கிறேன்அதனால் தயவு செய்து தயவுசெய்து தயவுசெய்து என்னை நிறுத்தச் சொல்லாதேநான் விரும்பினால் லெனினை வாங்க முடியுமென்று யோசிக்க விரும்புகிறேன்அல்லது ஒரு நினைவு மண்டபம் கட்ட முடியுமென்று அல்லது ஒரு பிரமிடை எழுப்பலாமென்று அல்லது ஒரு ஸ்பிங்க்ஸை நிர்மாணிக்கலாமென்று யோசிக்க விரும்புகிறேன்''.

''மன்னித்து விடுங்கள் தாத்தா''
''பேராஇன்னும் என் மேல் கோபமாஎன்னுடைய  தவறால்தான்   உன் பெற்றோர்கள் இறந்து போனார்கள் என்று  இன்னும் நினைக்கிறாயா?'' என்று கேட்டார்.


என்னுடைய பதினாறாவது பிறந்த நாளன்று அவர் ஒரு சைக்கிளைப் பரிசளித்தபோது நான் அவருடைய தவறுதான் காரணமென்று சொல்லியிருக்கிறேன்.  எங்கள் குடியிருப்பில் பிறந்த நாளைக் கொண்டாடிக்கொண்டிருந்தோம்கேக்கும் மெழுகுவர்த்திகளும் பலூன்களும் கொண்டு வந்திருந்தார்அவர் கொண்டு வந்த பரிசுப் பொருட்களின் உறைகளைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது அவர் கைகளைத் தட்டிப் பாட்டுப் பாடிக் கொண்டிருந்தார்.

''அது ஒரு பி எம் எக்ஸ்.  அதை வாங்குவதற்கு என்னுடைய தொடர்புகளையெல்லாம் பயன்படுத்தினேன்''என்று கண்ணைச் சிமிட்டினார்.

அப்புறம்தான்  நான் வெடித்தேன்.

''எல்லாம் உங்களுடைய தவறு'' அப்பா உங்களைப் பற்றி மிகவும் கவலைப் பட்டார்உங்களுடைய மடத்தனமான மாரடைப்புத்தான் கார்  மோதுவதற்குக் காரணம்'' என்று கத்தினேன்.

கேக்கை தரையில் தட்டி எறிந்தேன்எழுந்து போய் அந்தச் சந்தர்பத்துக்கு முன்பு எங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக இருந்த படங்கள் எல்லாவற்றையும் கிழித்து வீசினேன்தட்டுகளையும் கோப்பைகளையும்  உடைத்தெறிந்தேன்.

''நீங்கள் செத்துத் தொலைந்திருக்கலாம்தூக்கத்திலேயே செத்துப் போயிருக்கக் கூடாதா என்று நினைத்தேன்'' என்று கத்தினேன்.

''சின்கோ '' என்றார் அவர்.

''சின்கோ என்று கூப்பிடாதீர்கள்உங்கள் பிள்ளை செத்துப் போனார்உங்களால்தான் அவர்கள் இரண்டு பேரும் செத்துப் போனார்கள்'' என்று கத்தினேன்.

மறுநாள் தாத்தா நகரத்தை விட்டுப் போனார்லெனின்கிராடுக்குத் திரும்பிப் போய் உள்ளூர் தலைமறைவுக் கட்சியில் சேர்ந்தார்தினமும் லெனின் தொகுதியை அக்குளில் இடுகிக்கொண்டு கல்லறைக்குப் போனார்அதன் பிறகு மீண்டும் என்னை சின்கோ என்று அவர் கூப்பிடுவதைக் கேட்கவில்லைஒரு வருடம் நாங்கள் பேசிக்கொள்ளவில்லைஅமெரிக்கா வுக்குப் போவதைத் தெரிவிக்கத் தொலைபேசியில் அழைத்தேன்.

''என் பேரன் ஒரு முதலாளியவாதிநான் எதையெல்லாம் கடந்து வந்தேன் '' என்றார்.


நாங்கள் லெனினை வாங்கிய ஐந்து மாதங்களுக்குப் பின்பு எங்கள் உரையாடலின்போது தாத்தா சொன்னார்.''அவர் இங்கேதான் இருக்கிறார்கம்யூனிஸ்ட் அகிலத்தின் தலைவர் லெனின் கிராடுக்கு வந்திருந்தார்''

''உங்களுக்குக் கிறுக்காதாத்தா?''

''சடலம் நேற்று வந்து சேர்ந்ததுகுளிரூட்டப்பட்ட சவப்பெட்டியும் இதர சாமான்களுமாகநினைவு மண்டபத்தின் வேலைகளையெல்லாம் கிட்டத்தட்ட முடித்து விட்டோம்அதுவரைக்கும் லெனின் வீட்டில் தங்கியிருக்கிறார்உன்னுடைய அறையில்தான் தங்கவைத்திருக்கிறோம்உனக்கு ஆட்சேபமில்லையே?''

''உங்களுக்குக் கிறுக்குப் பிடித்து விட்டதென்று நினைக்கிறேன்''

''நானும் அப்படித்தான் நினைக்கிறேன்'' தாத்தா ஒப்புக்கொண்டார்.

''நீங்கள் ஒரு டாக்டரைப் பார்க்க வேண்டும்''

''அதனால் என்ன பயன்தலைவலி எப்போதும் கூடவே இருக்கிறதுகைகளில் குடைச்சல்மறுபடியும் கெட்ட கனவுகள் வருகின்றனபதுங்கு குழியில் கிடந்த மக்களைப் பற்றிய கனவுகள்''

''அவர்களுக்கு என்ன ஆயிற்று?''

''அந்தப் பதுங்கு குழியில் பதினந்துக்கும் மேற்பட்ட ஆட்களுடனும் இரண்டு கர்ப்பிணிகளுடனும் ஒரு பசித்தவெள்ளாட்டுடனும் நான் எப்படி இருந்தேன் என்று உனக்கு நினைவிருக்கிறதாபசியுடனும் நிராசையுடனும் கிடந்து கடைசியாக கிராமத்துக்குப் போக தைரியத்தை வரவழைத்துக்கொண்டேன் என்பது உனக்கு நினைவிருக்கிறதா?''

''ஆமாம்நினைவிருக்கிறது''

''மூன்று வருடங்களுக்குப் பிறகு காட்டில் அதே இடத்துக்குத் திரும்பப் போனேன்அந்தப் பதுங்கு குழிக்குஎன்னுடைய சுதந்திரமான கண்களால் அதை இன்னொரு முறை பார்க்க விரும்பினேன்நுழைவு வழியைச் சுத்தப்படுத்தினேன்ஏணிவழியாகக் கீழே இறங்கி அவர்க¨ளைப் பார்த்தேன்பதினைந்து ஆண்கள்இரண்டு பெண்கள்ஒரு வெள்ளாடுஎல்லாரும் இறந்து போயிருந்தார்கள்.''

''பதுங்கு குழியிலா?''

''பதுங்குகுழியில்தான்யுத்தம் முடிந்து விட்டதென்று யாரும் அவர்களிடம் சொல்லவில்லைஅவர்கள் வெளியே வரலாமென்று யாரும் சொல்லவில்லைஅவர்களுக்கு நடப்பதற்கான வலு இருக்கவில்லைபட்டினி கிடந்தே இறந்துபோனார்கள்''

தொலைபேசியின் ஒலிவாங்கியைக் கையில் பிடித்தபடி என்னுடைய நாற்காலியில் உட்கார்ந்து அந்த ஆண்களையும் பெண்களையும் ஆட்டையும் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்அவர்கள் சுதந்திரமானவர்கள் என்று எப்படி யாரும் சொல்லாமல் விட்டார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்இண்டெர்நெட் மூலம் நாங்கள் வாங்கியஇப்போது என் அறையில் குளிரூட்டத்துடன் இருக்கிற லெனினைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன்.  அப்படியே வெடித்துச் சிரித்துக் கொண்டிருந்தேன்நான் சிரிக்கத் தொடங்கியதும் தாத்தாவும் சிரிக்கத் தொடங்கினார்நீண்ட நேரம் சிரித்துக் கொண்டிருந்தோம்எங்களுடைய குரல்கள்  தொலைபேசி இணைப்பில் கலந்து கடைசியில் ஒன்றாகக் கேட்கும் வரை சிரித்துக் கொண்டிருந்தோம்.

மறுநாள் மறுபடியும் தாத்தாவை அழைத்தேன்ஆனால் யாரும் தொலைபேசியை எடுக்கவில்லைசில மணிநேரங்களுக்குப் பிறகு மறுபடியும் அழைத்தேன்அதற்குச் சில மணிநேரங்களுக்குப் பிறகும்யாரும் பதில் சொல்லவில்லைஇரண்டு வாரங்களாக நாள்தோறும் அழைத்தேன்ஒலிவாங்கியை இறுகப் பிடித்தே  கையில் காய்ப்பு காய்த்து விட்டதுஎன்னுடைய நாற்காலியில் உட்கார்ந்து இணைப்பின் மறுமுனை மௌனத்தைக் கவனித்துக் கொண்டிருந்தேன்இடையிடையே ஒலிக்கும் ஒரே மாதிரியான பீப்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன்அவை என்னுடைய மண்டைக்குள் ஒலிக்கும் துடிப்புகளைப்போல ஒலித்தனநிதானமாகவும் களைப்புடனும் எனக்கு விடைசொல்லும் துடிப்பொலிஉரக்க அழுதேன்ஒலிவாங்கியைக் கையில் வைத்துக்கொண்டு அறைக்குள் அடிவைத்து நடந்தேன்கூப்பிட்டுக் கொண்டேயிருந்தேன்.  எனக்கு வேறு எண்கள் தெரியாது தாத்தாவின் எண்ணைத் தவிர.


மறுநாள் தபாலில் எனக்கு ஒரு கடிதம் வந்ததுநீண்ட நேரம் அதைப் பிரிக்காமலே இருந்தேன்அதற்கான தைரியம் இல்லாமலிருந்ததுஇரண்டு நாட்கள் அழுதேன்கடைசியாக தேற்றிக்கொண்டு கடிதத்தைப் பிரித்தேன்.
''அன்புள்ள பேரனுக்குநான் இப்போது இறந்தவன்என்னுடைய இதயம் அதன் துடிப்பை நிறுத்தியதும் இந்தக் கடிதத்தை உனக்கு அனுப்புமாறு தோழர் பென்கோவிடம் தெரிவித்திருந்தேன்.  அவர் மிகவும் நல்லவர்இதை அனுப்பும் செலவை அவர் ஏற்றுக் கொள்வார்.

பேரனேநாம்நீயும் நானும் ஒரு கடினமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறோம்வருடங்களால் அல்ல;மரணங்களால் நமக்கு வயதாகி விட்டிருகிறதுஇப்போது நீ ஒரு மரணத்துக்கு மூப்படைந்திருக்கிறாய்இந்தச் சுமையை கௌரவத்துடன் சுமந்து செல்ஆனால் அது உன் முதுகை முறித்துவிடாமல் பார்த்துக்கொள்.  எல்லாரையும் விடவும் நீ அதிகம் துன்பப் பட்டிருக்கிறாய்ஆனால்மற்றவர்கள் இதை விடப் பெரும் வேதனைகளை அனுபவித்திருக்கிறார்கள்நீ என்னவாக இருக்கிறாயோ அதற்கு நன்றியுடன் இருநீ பார்த்தவைகளுக்கும் பார்க்காமல் விட்டவைகளுக்கும் நன்றியுடன் இரு.

கிரா மீன்கள்  எளிதில் மாட்டிக்கொள்ளக் கூடிய இரைகள்நீ ஒன்றை பிடித்தால் மற்றவை ஓடிப் போகாதுநீ கழியை தண்ணீரிலிருந்து எடுக்கும்வரைக்கும்கூட நீ அங்கே இருக்கிறாய் என்பது அவற்றுக்குத் தெரியாதுஅப்புறமும் கூடத் தெரியாதுமனித சுபாவத்தைப் பற்றிய பாடத்தை அவை நமக்குக் கற்றுக்கொடுக்கின்றன,பேரனேநீ நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய பாடம்மீன்களுக்கு இடையில் விழும் எல்லாக் கழிகளும் கவ்விப் பிடிக்க வேண்டியவை அல்லசில சமயம் தவறான கழியைப் பிடிப்பது உன்னை உன்னுடைய முடிவுக்கே கொண்டுபோய் விடலாம்எனவேஎன் அன்பானவனேஎந்தக் கழியைப் பற்றிக் கொள்வது எதை விடுவது என்று எச்சரிக்கையுடன் யோசிதகுதியான யுத்தங்களில் மட்டும் ஈடுபடுமற்றவை உன்னைக் கடந்துபோக விடுகழி உன்னைப் பலமாகத் தாக்கினாலும் அதை மறுபடியும் பற்றிக் கொள்ளாமலிருக்கக் கற்றுக்கொள்என் அன்பானவனேஎன்னை மன்னித்து விடு''
கடிதத்தின் முடிவில் தாத்தா நான்கு வார்த்தைகளை எழுதியிருந்தார்.

''சின்கோநான் உன்னை நேசிக்கிறேன்''.

****
காலச்சுவடு இதழ் எண் 119 நவம்பர் 2009 இல் வெளியானது.


Comments

Popular posts from this blog

மாரிராஜ் இந்திரன் தேர்வுசெய்த கதை-1

கட்டுரைகள்