கமலக்கண்ணன் தெரிவுசெய்த கதை - தமிழாக்கம் சிறில்

மூலம் http://www.lightspeedmagazine.com/fiction/the-red-thread/

சிவந்த நூலிழை
- சோஃபியா சேமற்றர்

அன்புள்ள ஃபாக்ஸ்,

ஹே. இது சாரா. எம்691, பிளாக் ஹாவ்க், சவுத் டக்கோட்டாவிலிருந்து உன்னை தொடர்புகொள்கிறேன். இரவாகிவிட்டது, மையத்தில் விளக்குகள் எரிகின்றன. உதடு தொங்கும் ஒரு வயதான வெள்ளையர் இதை நிர்வகிக்கிறார் - கவுன்டரில் (சேவை முகப்பு) அம்மாவுடன் பேசிக்கொண்டிருக்கிறான். அம்மா பராவாயில்லை. நீ மாயமாய்ப்போய் சில வாரங்களுக்குப்பின், பள்ளத்தாக்கிலிருந்தபழைய குழுவிலிருந்து கிளம்பிய பின்னர் நாங்கள் உன்னைக்குறித்து மிகக்குறைவாகவே பேசிக்கொண்டோம். நான் சமன்பாடுகள் நிறைந்த உன்னுடைய பழைய ஸ்லேட்களில் (எழுதுபலகை) ஒன்றை கண்டடைந்தபோது அம்மா உன் பெயரை ஒரு முறை குறிப்பிட்டாள். "அதான்.." அவள் சொன்னாள் "அதான் ஃபாக்ஸ்".

ஒருமுறை - நான் இதை உனக்கு சொல்லியிருக்கவில்லை - ஒரு பாலத்தின்மீது சிலவற்றை இழந்துவிட்டோம். கலிஃபோர்னியாவில் இருக்கையில், நாங்கள் உன்னை சந்திக்கும் முன்பு. காற்று மிகப்பலமாக இருந்தது, நாங்கள் கடந்து சென்றது முட்டாள்தனம். என் அப்பாவின் பொருட்களடங்கிய ஒரு பெட்டி தொலைந்துபோனது, அநேகமாய் புத்தகங்கள், அம்மா சொன்னாள். "அவ்வளவுதான். அது போச்சு".

நான் சொன்னதைப்போல, காற்று பலமாயிருந்தது. எனக்கு கேட்டிருக்காது என அவள் நினைத்திருக்கலாம்.
அவள் என்னைப் பார்க்கிறாள் என நினைக்கிறேன். கண்ணாடி வழியே சரியாகச் சொல்ல முடியவில்லை. அது சிராய்ப்புகளாலும்  இறந்த பூச்சிகளாலும் மங்கிப்போயுள்ளது. நான் போகவேண்டும் என யூகிக்கிறேன். நாங்கள் வடக்கு நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறோம் - ஆமாம், நேராகக் குளிர்காலத்திற்கு. இது அம்மாவின் யோசனை.
நீ எனக்குத் தந்த வளையை இன்னும் அணிந்துள்ளேன். அது என் மணிக்கட்டை சிவப்பாக்கிவருகிறது.
.....
அன்புள்ள ஃபாக்ஸ்,

ஹே. இது சாரா. நான் எம்718, பிக் பாட்டம், சவுத் டக்கோட்டா மையத்திலிருக்கிறேன். அதுதான் உண்மையிலேயே அதன் பெயர், ஒரு பழைய வீடும் அதன் மாபெரும் புவிகீழ்த்தளமுமன்றி (பேஸ்மென்ட்)இங்கே வேறொன்றுமில்லை. சிறிய உணவு விடுதி ஒன்றுள்ளது. நான் மீண்டும் உன்னைத் தொடர்புகொள்ள முயலலாம் என நினைத்தேன்.

என் செய்தி கிடைத்ததா?

இங்கே கூட்டம் அதிகம். என் பின்னால் யாரோ நின்றுகொன்டிருப்பதைப்போல் உணர்கிறேன்.
புவிகீழ்த்தளம் அழகாக உள்ளது, ஓக் மர வளைவுகளால் நிறைந்துள்ளது. வெதுவெதுப்பாயுள்ளது. மங்கிய சிவப்புவிகக்குகள், பாலைவனத்தில் சில நேரங்களில் வானம் தோன்றுவதைப்போல, எரிந்துகொண்டிருக்கின்றன. இங்கே நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள், இரு வயதான பெண்கள் உட்பட, அவர்கள் அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஒருத்தியின் தலைமுடி மேலெழும்பியுள்ளது, அதில் பல காய்ந்த குச்சிகள்  சொருகப்பட்டுள்ளன. அவள் என்னைக் பெட்டைக்கோழி (சிக்கன்) என அழைக்கிறாள். வெட்கமாக இருக்கிறது, ஆனால் நான் உண்மையில் கண்டுகொள்வதில்லை. ஒரு அடுப்பு உள்ளது, துணியைப்போல மடிக்கப்பட்ட சூடான அப்பத்தை எங்களுக்குத் தந்தார்கள். நீ நலம்தானே? நான் நினைத்துக்கொண்டேயிருக்கிறேன், நீ நன்றாகச் சாப்பிடுகிறாயா என்றெல்லாம்.

பிக் பாட்டம். நீ அதை மறக்கமாட்டாய். ஒரு காட்டிற்கருகேயுள்ளது.
நீ இங்கு வருவதாயிருந்தால் காட்டிற்குள் போய்விடாதே. அங்கே 'கட்டுப்பாட்டுப் பகுதி' உள்ளது. வரும்போது துப்பாக்கி சத்தம்கூட கேட்டது. அம்மாவின் தோள்கள் உறைந்துவிட்டன அமைதியாக 'வேகமாகச் செல்வோம்' என்றாள். பிக் பாட்டத்தை அடைந்தபோது நான் கிட்டத்தட்ட ஓடிக்கொண்டிருந்தேன். அம்மாவின் இருக்கை உடைந்து விழுந்துவிடுவதைப்போல ஆடிக்கொண்டிருந்தது. என் மூச்சு வெள்ளையாகுமளவுக்கு குளிர் இருந்தது. ஒரு குன்றுபோன்ற பகுதியை விரைந்து கடந்தோம் அப்போது இந்தப் பெண்மணி கைகுட்டையை அசைத்துக்கொண்டு வீட்டின் வெளியே நின்றுகொண்டிருந்தாள்.

எல்லோரும் கூடியிருந்த கீழ்த்தளத்துக்கு அழைத்துச் சென்றாள். அடுப்பு வெம்மையாக ஒளிர்ந்துகொன்டிருந்தது, சிலர் கித்தார் வாசித்துக்கொண்டிருந்தனர். அவள் என்னை கட்டி அணைத்துக்கொன்டாள், புளித்த வாடையுடன். " பெட்டைக்கோழி" அவள் சொன்னாள்.

ஃபாக்ஸ். உன்னைக் காணாமல் தவிக்கிறேன்.

நாங்கள் இன்னும் வடக்கு நோக்கித்தான் சென்றுகொண்டிருக்கிறோம்.

பதில் அனுப்பு.

....

அன்புள்ள ஃபாக்ஸ்,

ஹே. இது சாரா. இந்த செய்தி உனக்கு கிடைக்குமானால் - நீ ஒன்றை மட்டும் எனக்குச் சொல்லவேண்டும், என்னால்தான் நீ பிரிந்து சென்றாயா? பள்ளத்தாக்கில் அந்த இரவு எனக்கு நினைவுக்கு வந்துகொண்டேயிருக்கிறது, குளிரில் நாம் எழுந்து அமர்ந்தபோது, படுக்கையுடன் சேர்த்து போர்த்திக்கொண்டிருந்தோம். நீ ஒரு நீண்ட சிவப்பு நூலை என் மணிக்கட்டில் வளைபோல அணிவித்தாய். நான் என் போர்வையிலிருந்து பால்வெளியைப்போன்ற (மில்க்கி வே) பச்சை நிறமுடைய சதுரத் துண்டை உனக்குத் தந்தேன். பால்வெளியைப்போல  இருக்கிறதென்று நீ சொன்னாய். வானம் தன்னை வெறுமையாக்கிக்கொள்வதைப்போல நட்சத்திரங்கள் வீழ்ந்துகொன்டிருந்தன. நீ என்னை நோக்கி சாய்ந்தபோது நான் என்னை வெறுமையாக்கி உன்னிடம் தந்தேன். அதன் பின் நாம் சண்டையிட்டதால்தான் சென்றுவிட்டாயா? என் குடும்பம் இந்த நாட்டிற்குச் சொந்தமானவர்கள், உன்னக்குச் சமமாகவே நாங்களும் இந்நாட்டவர்கள் எனச் சொன்னதால்தான் சென்றுவிட்டாயா? "ஒன்ன நீயே அவமானப்படுத்திக்காத" என்றாய் நீ. பின்னர்  "பாரு, இந்தப் புல் அப்படியே அம்மாவோட கண்ணு நிறம்" என நான் சொன்னபோது புல் கொள்ளை நோயின் நிறத்துலிருப்பதாகச் சொன்னாய்.

அவளுக்கு நீதான் விருப்பமானவன் தெரியுமா. அறிவுமிக்கவன். அவள் எப்போதும் விரும்பிய மாணவன். நீ இல்லாத போது "ஃபாக்ஸ்-பிரைட்" என்றே உன்னை அழைத்தாள்.


நாங்கள் இன்னும் பிக் பாட்டத்தில்தான் உள்ளோம். அம்மா எல்லோரையும் இங்கிருந்து வெளியேற்றவேண்டும் என நினைக்கிறாள். இது கட்டுப்படுத்த பகுதிக்கு மிக அருகில் உள்ளது. ஒவ்வொரு இரவும் அவள் பாடமெடுக்கிறாள், அவர்களும் எதிர் வாதம் வைக்கின்றனர், குறிப்பாக இங்கே அதிக உணவு உள்ளதால். அவர்கள் காட்டின் எல்லையில் விவசாயம் செய்து பழங்களை பக்குவப்படுத்துகிறார்கள். என்னை பெட்டைக்கோழி என அழைக்கும் பெண், அவள்தான் அம்மாபோலும், ஒவ்வொரு இரவும் ஒரு பழப்புட்டியை மெல்லிய மூடி சத்தத்துடன் திறப்பாள். பின்னர் அதை ஒரு தேக்கரண்டியுடன் எல்லோருக்கும் தருவாள். பழம் பதப்படுத்தும் கலவை அதனுள் இருக்கும், வேர் சர்க்கரை நிறந்து கெட்டியாக. அங்கு ஒருவன் மட்டும் ஒவ்வொருமுறை பழத்தை கடிக்கையிலும் "ஆமென்" என்பான்.

மன்னிக்கவும். நீ பசியுடன் இருக்கவில்லையே?
ஏன் இவர்களெல்லாம் பிக் பாட்டத்தை விட்டு, இங்குள்ள பொருட்களையெல்லாம், என்னைவிடவும் எடை மிகுந்த தானியப்பைகளையும் விதைகளையும் எல்லாம் கட்டியெடுத்துக்கொண்டு வெளியேற மறுக்கிறார்கள் என உனக்கு இப்போது தெரிந்திருக்கும். "நாங்க முன்னால குளிர்காலத்துல இங்க இருந்திருக்கோம்." பெட்டைக்கோழிப் பெண் சொன்னாள் "அடுப்பு இருக்கு. எங்க கூடயே இருங்க. குழந்தைய கூட்டிட்டு வடக்க போகவேண்டாமே".
எல்லோரும் ஆமோதித்தார்கள். அம்மாவின் முகத்தில் வலியைக் காணமுடிந்தது. தான் தவறாக இருப்பதை அவள் வெறுத்தாள். அவளது ஆகச்சிறந்த வாதத்தை முன்வைத்தாள் "இன்றைக்கோ நாளைக்கோ அவங்க உங்களத் தேடி வந்திருவாங்க." அவள் சொன்னாள் "ரெம்ப பக்கத்துல இருக்கீங்க. உங்ககிட்டயும் குழந்தைங்க இருக்காங்க." இவ்வளவு உணவு இருந்தும் தனிப்படுத்தப்பட்டவர்கள் பிக் பாட்டத்து மக்களை தாக்காதது அதிசயம்தான் என்றாள். அதன்பின் எல்லோரும் அமைதியாகிவிட்டனர். கோழிப் பெண்மணி எச்சரிக்கையூட்டும்படி சுற்றும் முற்றும் பார்த்தாள். அவளது விழிகள் ஒளிர்ந்தன. அம்மா "இல்லை" என்றாள். பழச்சாறுக்கு "ஆமென்" சொல்லும் அந்த மனிதன் தாங்கள் ஏற்கனவே சிலமுறை தாக்கப்பட்டதாகச் சொன்னார்.

அம்மா முகத்தை மூடிக்கொண்டாள்.

"எங்களுக்குப் பரவாயில்ல" ஆமென் மனிதன் சொன்னார். அவர் அதுகுறித்து வருத்தம் கொண்டிருந்தார் எனத் தெரிந்தது.
பின்னர் நான் பிற பிள்ளைகளுடன் ஒரு மூலையில் இருந்தேன். தாக்குதல் குறித்து ஒரு பிள்ளையிடம் கேட்டேன், என் வயதுள்ள ஒரு பையனிடம், அவன் தன் சட்டையை சுருட்டிவிட்டான் அவனது மணிக்கட்டில் கட்டு போடப்பட்டிருந்தது. அவனை யாரும் சுடவில்லை, ஆனால் ஒருவரைக் கடப்பாறையால் தாக்கும்போது கை பிசகிவிட்டது.

முகத்தை திறந்தபோது அம்மா சொன்னாள் "இது ஒரு வாழ்க்கையா? இது இயக்கம் இல்ல" இருந்த இடத்திலேயே இருப்பது என்பது பழைய முறை, புதியதல்ல என்றாள். கோழிப்பெண் "எங்களுக்குத் தெரியும். கண்மணியே" என்றாள்.

கைக்கட்டுபோட்டிருந்த அந்தப் பையனை பார்த்த பின்பு நான் அம்மா கழிப்பறை செல்ல உதவினேன். பின்னர் இருவரும் போர்வைகளின் மேல் படுத்துக்கொண்டோம். "நாம இங்கேர்ந்து போயிரணும்" என்று முனகினாள் அம்மா.

"சரி" என்றேன் நான்.

"எதுக்குண்ணு தெரியும்ல?" அவள் சொன்னாள் "ஏண்ணா நாம நிக்கமாட்டோம். நகர்ந்துகிட்டேயிருப்போம்."

"ஆமா" நான் சொன்னேன். ஆமா அம்மா, நான் நினைத்தேன். நாம் நகர்ந்துகொண்டேயிருப்போம்.

நீ எங்கே எப்போது விரும்புகிறாயோ அப்போதெல்லாம் நாம் நகர்ந்துகொண்டேயிருப்போம். கடல்மீது அங்கும் இங்குமாக பயணித்துள்ளோம். யாம்பியோவில் பறக்கும் படுக்கைகளிலும் கிஸ்மாயோவில் படகுவீடுகளிலும் தங்கியுள்ளோம். இப்போது நீ குளிர்காலத்தின் துவக்கத்தில் நார்த் டக்கோட்டாவிற்குச் செல்ல முடிவெடுத்துள்ளாய். வழி நெடுகிலும் கட்டுப்பாட்டுப் பகுதிகள் விரவிக்கிடக்கின்றன. நண்பர்களையெல்லாம் பின்விட்டுச் செல்ல முடிவெடுத்துள்ளாய். பள்ளத்தாக்கில் எனக்கு நல்ல கலைக்குழு கிடைத்தது. எங்களது கடைசி படைப்பை நீ பார்த்தாயே ஃபாக்ஸ். ஒரு மெல்லிய கோடு இருபது மரங்களின் உச்சியை இணைத்துச் சென்றது. இழைகளும் நூல்களும் கிரிம்சன் வண்ணத்தில் கார்டினல் பறவையின் இறகுகளோடு இணைக்கப்பட்ட நெடிய உடையாத கோடாக நீட்டப்பட்டிருந்தது. பூமியின் மீது ஒரு சமிக்சையைப்போல. காலை ஒளியில் அது சீரசைவு கொண்டதைப்போலிருந்தது. ஒரு செய்தியை ஏந்திச் செல்லும் ரேடியோ அலைகளை அது நினைவூட்டியதாக நீ சொன்னாய். நாங்கள் அதை "சிவந்த நூலிழை" என அழைத்தோம்.
நான் ஒருவேளை அதை மீண்டும் காணப்போவதேயில்லை.
மிக மெல்லிய வெளிச்சம் இங்கே ஆனால் நான் அழுதுகொண்டிருப்பதைக் கண்ட அம்மாவின் புன்னகையை அது மெல்லியதாக்க முடியவில்லை. "நீ எவ்வளவு அதிஷ்டக்காரின்னு உனக்கு தெரியல". என்றாள் அவள்.

....
அன்புள்ள ஃபாக்ஸ்,

ஹே. இது சாரா. நான் எம்738 மையத்திலுள்ளேன், நார்த் டக்கோட்டாவில் எங்கோ. இந்த மையம் ஒரு பழைய ஆலயம். இரவில் ஒரு வயதான மனிதன் கவனமாக மேசைமீது விரித்து வைத்த பிளாஸ்ட்டிக் விரிப்புகள் மீது எங்களுக்கு ஊறுகாயும், கிழங்கு சூப்பும் தருகிறார்கள்.

மெழுகு எழுதுகோல்களை உருக்கிச் செய்த அழகிய மெழுகுதிரிகளை சன்னலோரம் வைத்துள்ளனர். பயணிகளுக்காக. ஏனெனில் பல புதியவர்களும் இங்கே இரவில் வந்து சேர்கிறார்கள். "நமக்குத் தெரிஞ்சிருந்தா" அம்மா சொல்கிறாள் "இப்படி ஒரு வாழ்க்கை சாத்தியம்ணு நமக்குத் தெரிஞ்சிருந்தா நாம எப்பவோ இப்பிடி வாழ ஆரம்பிச்சிருப்போம்"
.
மழுங்கிய சாம்பல்நிற முகத்தையுடய மனிதன் ஒருவன் அம்மாவுடன் விவாதித்துக்கொண்டேயிருக்கிறான். "நீ இந்த மனுசத் தன்மையுள்ள ஆளுகள்ல ஒருத்தி." அவன் இன்றிரவு சீறினான். "மக்கள் நல்லவங்கண்ணு நாம நிருபிச்சிட்டோம்ணு நினைக்கிறவங்க. நான் ஒண்ணு சொல்றேன் தோழி கேக்குறியா. ஆயில் தட்டுப்பாடும் சரிவும் இல்லைண்ணா முன்ன மாதிரியே நாம இருந்திருப்போம்."

அம்மா தலையசைத்து ஆமோதித்தாள். மெழுகு வெளிச்சத்தில் ஒரு அரைப்புன்னகை. "ஆமா தோழா(இட்டாலிக்ஸ்)' அந்த வார்த்தையை சற்று அழுத்திச்சொன்னாள் அம்மா.

"இன்னொண்ணு" அந்த மழுங்கிய முகம் கொண்டவன் சொன்னான் "இந்தப் பிள்ளைங்கெல்லாம் பல்ளிக்கூடத்துல இருந்திருக்கும்."
"இல்லைண்ணா ஆர்மியில" அம்மா இனிமையாகச் சொன்னாள்.
உண்மையில் பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில்தான் இருந்தார்கள், ஏனென்றால் அம்மா இருக்கிறாள். நாங்கள் எங்கே தங்கினாலும் பாடம் எடுப்பதுவே அவள் நன்றி செலுத்தும் விதம். எல்லா பிள்ளைகளையும் கூட்டி மணலில் அவர்களது பெயரை வரையச் சொல்லி, பெருக்கல் பட்டியலில் கேள்விகளைக்கேட்டு இயக்கத்தைக் குறித்து பேசுவாள். நாம் நினைத்த இடத்திற்கு செல்ல முடியும் என்பது எத்தனை அரியது. பிரச்சனையிலிருந்து விலகி நடந்துவிடுவது. ஒரு படகைக்கட்டி நீரைக் கடந்துவிடுவது. அவள் சிறுமியாக இருந்தபோது எங்கேயும் போக முடிவதில்லை என்பாள். எல்லைகள், சோதனைச் சாவடிகள், சிறைச்சாலைகள், மொத்த உலகமும் துண்டுதுண்டாக்கப்பட்டிருந்தது, எல்லாமும் யாருக்கோ சொந்தம். "வெளிச்சத்த தவிற எல்லாம்" அவள் சொல்வாள். "நெருப்பத் தவிற எல்லாம்". அவர்களுக்கு விருப்பமென்றால் உங்களை ஒரு இருண்ட இடத்தில் வைத்துக்கொள்வார்கள். இன்றிரவு எனக்கு ஏற்கனவே தெரிந்ததைத்தான் குழந்தைகளுக்குச் சொன்னாள், என் அப்பா அப்படித்தான் ஆனார், ஒரு இருண்ட இடத்தைச் சென்றடைந்துவிட்டார், வேலைக்குச் செல்லும் வழியில் பிடித்துச் சென்றுவிட்டார்கள், என்றென்றுக்குமாகச் சென்றுவிட்டார். "எதுக்கு?" ஒரு பிள்ளை கேட்டது. "எனக்குத் தெரியாது" அம்மா சொன்னாள். "அவருடைய பேயரால இருக்கலாம்? அவர் தீவிரவாதிகளுக்கு ஆதரவானவர்ணு அவங்க நினைச்சிருக்கலாம்? அப்பெல்லாம் யார வேணும்னாலும் பிடிச்சிட்டுப் போயிரலாம்."

வழக்கமாக இங்கிருந்து அவள் இயக்கத்துக்கு முன்பு வேறொரு பெயர் இருந்த கதைக்குச் செல்வாள், மக்கள் அதை கிரீனிங் என அழைத்தார்கள் என்று, ஊடகங்கள் இதை முதலில் ஒரு சுற்றுச்சூழல் இயக்கமாகக் கருதியதை, மக்கள் நெடுஞ்சாலைகளில் வாகனங்களை விட்டுவிட்டுச் சென்றதை, நடந்து அல்லது அவளைப்போல உருட்டிக்கொண்டு சென்றதை. வீழ்ச்சியின் துவக்கத்தில் எப்படி கிரீனிங் பிற இயக்கங்களுடன் ஒன்றிணைந்தது, அமைதிக்காக, நீதிக்காக, வெறும் வாழ்கைக்காக என்பதைச் சொல்வாள். புன்னகையுடன், பற்களின் இடைவெளி தெரிய, அவளது விருப்பமான வாக்கியத்தைச் சொல்வாள் "அந்த நாட்களிலே, நான் ஆய்வுச்சாலையில் வேலை செய்கையில், நாங்கள் அதை பரிணாமக் கூட்டமைவு என அழைத்தோம்".
இன்றிரவு அப்பாவைக் குறித்து பேசியதும் நிறுத்திவிட்டாள். அவள் முகம் சுருங்கி, வயதானதாயிருந்தது. நான் சொன்னேன் "நாம இன்னும் அவரக் கண்டுபிடிக்க முடியலாம்மா". ஏனென்றால் நமக்கென்ன தெரியும். இயக்கம் துவங்கியபோது அவர் அந்த இருண்ட இடத்திலிருந்து பிறரைப்போல தப்பி வந்திருக்கலாம், சாலைகளில் அவர்களைக் காண முடியும், மகிழ்ச்சியுடனும், அவர்களின் பழைய சீருடையின் ஒரு பகுதியை அணிந்தவாறு. ஒரு ஆரஞ்சு தலைக்கட்டு, கைகளைச் சுற்றி ஒரு சாம்பல்நிற துணி. கதவுகள் திறக்கப்படும் முன்பு, இயக்கத்திற்கு முன்பு அவர்கள் இருந்தசிறைச்சாலையின் பெயர் பச்சைகுத்தப்பட்டிருக்கும். என் தந்தை சில படிகள் இறங்கி என் தலைமுடியைத் தொட்டதாக ஒருமுறை கனவொன்றைக் கண்டேன். "நாம இன்னும் கண்டுபிடிக்கலாம்" நான் சொன்னேன். அம்மா என்னைக் கேட்காததுபோலநடித்தாள்.

இரவில் அவள் என்னை கூக்குரலால் எழுப்பிவிட்டாள்.

"என்னம்மா? என்ன பிரச்சனை"

"ஒண்ணுமில்ல ஒண்ணுமில்ல" கிசுகிசுத்தாள் "தூங்கு".

என்னால் தூங்கமுடியவில்லை.  படுத்துக்கொண்டே, நீ ஒரு ஓடையின் அருகே நடந்து செல்வதைக் கண்டேன். நீ ஒரு கறுப்புச் சட்டையை அணிந்திருந்தாய் உன் தலை கவிழ்ந்திருந்தது, உன் கூர்மையான பார்வையுடன். அங்கே பள்ளத்தாக்கிலிருந்த குகைக்குள் என் அப்பாவின் தலைமுறையை நான் உனக்கு ஒப்புவித்ததை நினைவுகூர்ந்தேன். என் பெயர், பின்னர் என் தந்தையின் பெயர், என் தாதாவின், கொள்ளுத் தாத்தாவின் பெயர்கள், காலத்தில் பின்னோக்கிச் சென்று. சாரா, சையது, முகமது, முகமத், இஸ்மாயில். பத்து தலைமுறைகளை என்னால் சொல்ல முடியும். "சிறப்பு" என்றாய் நீ. உன்னுடைய போர்வை நம்மைச் சுற்றியிருந்தது, பல மைல்களுக்கும் நமது மூச்சுக்காற்று மட்டுமே வெதுவெதுப்பூட்டியது, அப்படித்தான் தோன்றியது.
"இது ஒரு வரைபடத்தப் போல" நீ சொன்னாய் "இடங்களுக்குப் பதிலா மக்களக் காமிக்குது". இப்படி யோசிப்பது எதிர்காலத்தப்போல் இருப்பதாக நீ சொன்னாய்.
"ஆமா" நான் சொன்னேன் "ஆனா போர் நடந்தப்ப அவங்க குடும்பத்திலேயே ஒருத்தர் ஒருத்தர கொன்னுட்டாங்க. மத்த எல்லையிலெல்லாம் நடந்ததப் போல".
ஒரு இடத்துக்கு விசுவாசமாயிருப்பது, ஃபாக்ஸ். அது வலி.
...
ஃபாக்ஸ் இது சாரா. உனக்கு தெரியுமா? அம்மா நோய்வாய்ப்பட்டிருப்பது? உனக்குத் தெரிந்திருந்தும் நீ என்னிடம் எதுவும் சொல்லவில்லை? உனக்குத் தெரிந்தும் நீ அவளை விட்டுச் சென்றுவிட்டாய்?

என்னமாதிரி ஆள் நீ? யாரோ என் நெஞ்சில் சுத்தியால் அறைந்ததைப்போலிருந்தது. "அந்தப் பையனுக்குச் சொன்னேன்" இருண்ட அறைக்குள் அவள் என்னிடம் முனகினாள் "அந்தப் பையனுக்குச் சொன்னேன்". அவள் யாரைச் சொல்கிறாள் என எனக்குத் தெரிந்தது. உடனே எனக்குத் தெரிந்தது. அவள் வருந்துவதாகச் சொன்னாள். உன்னைத் துரத்திவிடுவது அவளது நோக்கமாக இல்லை.

அதனால்தான் நீ போய்விட்டாயா? உனக்குப் பிரியமான ஒருவர் இறக்கப்ப்போவதை நீ தெரிந்துகொண்டதாலா?
அம்மா வேறெந்த குழந்தைக்கும் உனக்கு செய்ததைப்போல செய்யவில்லை. நீங்கள் இருவரும் பலகைகளில் எப்போதும் கிறுக்கிக்கொண்டேயிருந்தீர்கள். நாங்களெல்லாம் ஏக்கார்ன் கொட்டைகளை தின்றுகொண்டிருந்தோம். தரையில் அவள் இருக்கையருகே மண்டியிட்டு அதன் கையில் உன் எழுதுபலகையை வைத்திருப்பாய். ஒன்றாய் சாய்ந்து நீங்கள் இருவரும் இயக்கத்தை எப்படி நீட்டிப்பது, எப்படி தொடர்புவலைகளை இயக்குவது, உலகத்திலிருந்து மென்மையாகசக்தியைப் பெறுவது எப்படி... பின்னர் நீ நானும் நீயும் மிகப் பொருத்தமானவர்கள் ஏனென்றாய் நாம் இருவருமே நிலத்தின் மீது கோடுகளை வரைவதை விரும்பினோம், என்னுடையது கண்னுக்குத் தெரிவது, உன்னுடையது நிரலியாலானது என்றாய். உண்மையில் நீ அம்மாவுக்குத்தான் பொருத்தமானவன். நீ அவளுக்குப் பொருத்தமானவன் ஃபாக்ஸ் "ஃபாக்ஸ் பிரைட்" அவள் உன்னை அழைத்தாள். ஆனால் நீ அவள் சாகக் கிடக்கையில் கைவிட்டுச் சென்றாய்.

உனக்குத் தெரியுமா? பள்ளத்தாக்கில் நாம் அந்த இரவைக் கழித்த பின்னர் நான் சொன்னவற்றுக்காக நான் வருத்தப்படவில்லை. உன்னைப்போல நானும் இவ்விடத்தைச் சார்ந்தவள் எனச் சொன்னதற்கு வருத்தப்படவில்லை. என் தந்தையை அவர்கள் பிடித்துச் சென்று கொன்றார்கள், ஏனென்றால் அவர் போராலழிந்த நாட்டிலிருந்து "வந்தேறி" என அவர்கள் எண்ணியதால்தான். ஆனால் என் அப்பாவுக்கு இந்நிலம் பரிச்சயமானது, என் அம்மாவை சந்திக்கும் முன்பு அவர் முப்பது மாகாணங்களில் வாழ்ந்திருந்தார். எரிஎண்ணை இருந்த காலங்களில் எல்லையிலிருந்து எல்லைக்கு அவர் சரக்குவண்டிகளை ஓட்டிச் சென்றிருக்கிறார். எண்ணற்ற எரிஎண்ணை விற்பனை நிலையங்களில் அவர் தன் கைரேகையை விட்டுச் சென்றிருக்கிறார், எண்ணற்ற விடுதிகளில் தன் தாடி மயிரை விட்டுச் சென்றிருக்கிறார், மறக்கப்பட்ட ஒரு அரசுச் சிறைச்சாலையில் தன் எலும்புகளை விட்டுச் சென்றுள்ளார். என் அம்மாவும் இவ்விடத்தைச் சேர்ந்தவளே, அவள் அழுதுகொண்டேயிருந்தாலும், உனக்கு நம்பமுடிகிறதா, என் அம்மா, அவளைப் பார்த்தால் யாரேன்றாலும் சத்தியம் செய்வார்கள் இவள் வாழ்க்கையில் அழுதிருக்கவே மாட்டாள் என்று, அவள் அழுகிறாள் ஏனென்றால் நாங்கள் இப்போது அவள் வளர்ந்த வீட்டில்  வசிக்கிறோம், ஒரு பழைய பண்ணைவீடு, பல சலசலக்கும் குடுபங்களுடன். இங்கேதான் அவள் பிறந்ததும். இறக்கும் முன்பு இங்கே வரவேண்டும் என அவள் நினைத்திருந்ததால் அவள் அழுகிறாள். அதனால்தான் நாங்கள் இங்கிருக்கிறோம். ஒரு இடத்திதில் விருப்பப்பட்டு இருப்பதால் அவள் இயக்கத்துக்குத் துரோகம் செய்வதாக நினைக்கிறாள். அவளது பழைய பைபிளின் ஒரு பக்கத்தை நாங்கள் கண்டுபிடித்த அந்த அறையில் படுத்துக்கொண்டு வெளியே தெரியும் செர்ரி மரத்தின் அமைப்பைக் கண்டு அழுகிறாள். என் அம்மா நம் உலகத்தை மாற்றிய இயக்கத்தை அத்தனைதூரம் விரும்பியவள், அவள் உழைத்த இயக்கத்தை, வருடக்கணக்காக, நாம் பிறக்கும் முன்பே, வேலையை இழந்து பற்களை இழந்து. அவள் இயக்கத்தை எத்தனைதூரம் விரும்பினாளோ அத்தனைதூரம் தன்னை வெறுத்துச் சாகப் போகிறாள்.

நீ தந்த வளையை நான் வெட்டிவிட்டேன்.

பனிபொழிய ஆரம்பித்துவிட்டது. நான் போகவேண்டும்.

பார்ப்போம்.
...

அன்புள்ள ஃபாக்ஸ்,

ஹே. இது சாரா. உனக்குத் தகவலனுப்பி ஆறுமாதங்கள் இருக்கும். நீ எனக்குப் பதிலளிக்கவில்லை.

இன்று நான் பண்ணை விட்டிலிருந்து கிளம்பிவிட்டேன். அம்மாவின் அறையை சுத்தம் செய்தேன், அவள் குழந்தையாக உறங்கிய அறை, அவள் மரித்த அறை. பழைய நகங்கள் படுக்கையின் கீழ் விதைகளைப்போல.

இங்கே நல்ல மனிதர்கள் உள்ளனர். அம்மா அவர்களை "சாதாரண மனிதர்கள்" என்பாள் அல்லது அவளது சுவையான வரி ஒன்றில் "நம்மில் அநேகம்பேர்". அவர்கள் அவளுக்கு கொஞ்சம் கஞ்சாவை அளித்தனர், அது அவளுக்கு முடிவை இலகுவாக்கியது. ஒரு இரவில் அவள் சொன்னாள் " சாரா. நான் ரெம்ப சந்தோஷமாயிருக்கேன்".
கொஞ்சம் சிரித்தாள் பின்னர் கைகளை முகத்துக்கு மேலே அசைத்தாள். அவை விநோதமான திரவ இயக்கம் கொண்டிருந்தன, நீரடிச் செடிகளைப்போல. "பாரு" அவள் சொன்னாள் "இதுதான் இயக்கம்". "சரிம்மா". நான் சொன்னேன், கைகளைப் பிடித்து அவள் பக்கவாட்டில் வைக்க முயன்றேன். என்னுடைய பிடியிலிருந்து விடுவித்துக்கொண்டாள், அதிசயிக்கத்தக்கவலுவுடன். "பாரு", கிசுகிசுத்தாள், கைகளை அசைத்துக்கொண்டே "இது எப்படி வேலை செய்யுது பாத்தியா? இந்தப்பக்கம் வன்முறையும் கொடுமையும் இருக்குது, எல்லாரும் விலகிப்போறாங்க. கட்டுப்பாட்டு பகுதியெல்லாம் சுருங்கிப்போற வரைக்கும் எல்லாரும் விலகிப்போறாங்க. ஒருவகை ஒதுக்குதல். நம்ம மக்கள் புரிஞ்சிகிட்டாங்க."

"நம்ம மக்கள்?"

கொஞ்சம் இரகசியமும் வெட்கமும் கலந்த ஒரு சிரிப்பைத் தந்தாள். சிறுமியாக ஒரு சாதாரணமரத்தாலான ஆலயத்துக்கு அவள் போவாள். அங்கே அனைவரும் அமைதி மீது நம்பிக்கை கொண்டிருந்தனர். அங்கே அவர்கள் பாடினார்கள் ஆனால் கருவிகளை இசைக்கவில்லை. அங்கே பெண்கள் தலைமுடிகளை சிறிய வெள்ளை நிறத் தொப்பிகளைக் கொண்டு மறைத்திருந்தனர். அதுபோன்றவர்களை கலிஃபோர்னியாவில் பார்த்திருப்பதாக நான் சொன்னேன். "அவங்க மிளகாய் வச்சிருந்தாங்கம்மா, நியாபகமிருக்கா?" "நிச்சயமா" அவள் மூச்சிரைத்தாள். "சிவப்பு மிளகாய்". அந்த நினைவு அவளை மகிழ்ச்சியால் நிரப்பியது. அவள் அந்தப் பழையதிருச்சபையையும், பழைய பண்ணை வீட்டையும் விட்டுச் சென்றுவிட்டாலும் இயக்கத்தின் அமைப்பின் வழியாக தன் பால்யத்தைக் காண முடிகிறது என்றாள்.

"தனிமைப்படுத்துறதுண்ணா என்ன ஒருவகை ஒதுக்குதல்தான?" மெலிதாகச் சொன்னாள் "நாங்க அதத்தான் செய்வோம், இயக்கத்துல. விகலகிப்போவோம், வன்முறையிலிருந்து விலகிப்போவோம். வன்முறையால அழிக்கப்பட்ட இடம் ஒரு சிறை. அங்கிருந்து வெளியேற எல்லாருக்கும் வாய்ப்பிருக்கணும். இயக்கம் கதவுகளத் திறந்துச்சு".

சன்னல் வழியே வந்த வெளிறிய ரோஜா நிற வெளிச்சத்தில் படுக்கையில் அவள் மிகச் சிறியதாகத் தெரிந்தாள். பனிபடர்ந்த நாட்களில் நிலாப்பொழுதுகளில் இவ்வாறு இருக்கிறது. பலவண்ணப் படிகக்கற்களைப்போன்ற வானம்.
"அந்தக் குழந்தைக்கான போர்வை" அவள் சொன்னாள் "அத இன்னும் வச்சிருக்கியா?"

நான் அதை வெளியே எடுத்தேன். ஒரு சதுரம் பிய்த்தெடுக்கப்பட்டிருந்தது, பச்சைவண்ண சதுரம். "உன்னுடைய பாட்டி இத தச்சா" அவள் சொன்னாள்.
அதை நீன் இன்னும் வைத்திருக்கிறாயா என வியக்கிறேன் ஃபாக்ஸ். அந்த பச்சை சதுரம். பால்வெளி.

பின்னர் அவளால் என்னை அடையாளம் காண முடிந்ததா எனத் தெரியவில்லை ஆனால் அவள் கேட்டாள் "நீ எங்கிருந்து?" நான் சொன்னேன் "இங்கதான்." ஏனென்றால் 'இங்கே' என்பது இந்த வீட்டைக் குறிக்கிறது, இந்தப் பூமியைக் குறிக்கிறது. உன்னருகிலே என்றும் குறிக்கிறது.

"நீ ஒரு தேவதூதனா?" அவள் என்னைக் கேட்டாள்.

"ஆம்" என்றேன்.
...
அன்புள்ள ஃபாக்ஸ்.

ஹே. இது சாரா. பனி உருகிக்கொண்டிருக்கிறது. வாத்துக்கள் திரும்பிவிட்டன.

ஒவ்வொரு இடத்தை விட்டுச் செல்லும்போதும் உன்னக்கு ஒரு செய்தியை விட்டுச் செல்கிறேன். இதற்குள்ளாக நான் எனுடனே பேசிக்கொள்வதைப்போலுள்ளது. செய்திகளை, உதிரி முடியைப்போல எங்கோ விட்டுச் செல்கிறேன், வெட்டிய நகத்தைப்போல. பூமியில் என் தடங்களிலெல்லாம்.
இயக்கம். முன்னும் பின்னுமாக. நாம் இருவரும் உன்னுடைய போர்வையை அணிந்துகொண்டு, மழையெனப் பொழியும் எரிநட்சத்திருங்களுடைய பின்னணியில் பனிமூட்டத்தை மூச்சில் வெளிவிட்டுக்கொண்டு. இன்று உனது தூண்டப்பட்ட ஆர்வத்தை நினைத்துக்கொண்டேன், நான் என் தலைமுறையைச் சொன்னபோது. நீ எப்படி எதிர்காலத்தை அறிவதைப்போலிருந்தது என்றாய், நான் எத்தனை விரைவாக உன்னை துண்டித்துவிட்டேன். "அங்க போர் நடந்தது" நான் சொன்னேன் "குடும்பக் கோடுகள் எல்லைக்கோடுகளாயிடுச்சு". உன்னுடைய ஆர்வத்தை ஏனோ தாங்க முடியாதவளைப்போல. அதற்குப் பின் நாம் சண்டைபோட்டுக்கொண்டதை நினைக்கிறேன், நீ எப்படி "உன்னநீயே அவமானப்படுத்திக்காத" என்று சொன்னாய் என்பதை. நான் ஒருபோதும் இங்குள்ளவளாக மாட்டேன் என்ற அர்த்தத்திலா சொன்னாய்? ஒருவேளை நீ சொன்னதன் அர்த்தம் "உன்னை ஒரு குறியீடாக‌ (சிம்பல்) மாற்றிக்கொள்ளாதே" என்பதா?
இயக்கத்துக்கு தகுதியுள்ளவளாக ஆக முடியுமா? என் அம்மாவுக்கு தகுதியுள்ளவளாக? அப்பாவுக்கு? நான் நடந்துகொண்டேயிருக்கிறேன் ஃபாக்ஸ். மக்களைப் பார்க்கிறேன். உறைவிடம் தேடுகிறேன். கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர்க்கிறேன். நன்றியின் நிமித்தம் பிள்ளைகளுடன் கலை செய்கிறேன். அம்மாவை எப்போதும் நினைத்துக் கொள்கிறேன். எப்போதும். "நீ ஒரு தேவதூதனா?" அவளது கடைசி வரிகள்.


நான் குகைக்குள் உன்னுடன் படுத்த இரவுக்குப் பிறகு, நான் ஒளியின் தொட்டிலில் விழித்தெழுந்தேன். அன்னுடைய கை இரத்தத்தில் நனைந்ததைப்போலிருந்தது, ஆனால் அது தரையிலிருந்த புழுதிதான்.

நீ தந்த கைவளை என்னிடமுள்ளது. என் சட்டைப்பையில் அதை வைத்துள்ளேன். என் கையில் இன்னும் சிவப்புத் தடமுள்ளது, யாரோ என் கைகளைப் பிடித்திழுத்ததைப்போல.





அன்புள்ள ஃபாக்ஸ்,

ஹே. இது சாரா. சில நேரங்களில் ஒரே ஒரு வார்தை மட்டும் விட்டுச் செல்லலாம் என நினைக்கிறேன். என்னுடைய பெயர்மட்டும் என்றாலும். ஒரே ஒரு செய்தியிழை.

....
அன்புள்ள ஃபாக்ஸ்,

ஹே. இது சாரா.

...
அன்புள்ள ஃபாக்ஸ்,

ஹே. இது சாரா.
...
அன்புள்ள ஃபாக்ஸ்,

ஹே. இது சாரா.


உனது பதில் கிடைத்தது.

Comments

Popular posts from this blog

மாரிராஜ் இந்திரன் தேர்வுசெய்த கதை-1

கட்டுரைகள்