சாம்ராஜ் தெரிவு செய்த கவிதைகள்


ஞானப்பூங்கோதைக்கு வயது நாற்பது.

நான் பெண்ணாகப் பிறந்திருந்தால்
யாரைப் போல இருப்பேனோ
நேற்று அவளை நான் பார்த்தேன்
பேருந்தின் கடைசியில் நின்றிருந்த
அந்த பெண்ணிற்கு என் வயதிருக்கும்
அந்த நாசி, 
அந்தக்கண்கள், 
கருங்கூந்தல், 
மாநிறம்,
சற்றே திமிரான பார்வை
வடிவான தோற்றமென
நான் பெண்ணாய் பிறந்தால்
வடிவெடுக்கும் தோற்றம்தான் அது.
இரண்டொருமுறை யதேச்சையாக இருவரும்
பார்த்துக்கொண்டோம்
இரண்டொருமுறை யதேச்சையாக இருவரும்
பார்ப்பதைத் தவிர்த்தோம்
இப்போது பேசும் தொலைவில் நிற்கும் அவளிடம்
நீங்கள் இளங்கோவா என்றேன்
ஆமாம் என்ற அவள்
நீங்கள்
ஞானப்பூங்கோதைதானே என்றாள்.

தொகுப்பு : திருச்சாழல்
கவிஞர்: கண்டராதித்தன்
—————————————————————
வகுப்பிலேயே மிக அழகான பெண்

அவளை நாங்கள் எல்லோருமே காதலித்தோம்
சீனியர் பலரும் ஆசிரியர் சிலரும் கூட.
அவளுக்குத் தெரியும் தான் அழகாய் இருப்பது ஆனால் ‘அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது’
என்பது போலத்தான் நடந்து கொள்வாள்.

பூச்செண்டுகளோ வாழ்த்தட்டைகளோ எது கொடுத்தாலும் முகம் சுளிக்காது
வாங்கிக்கொள்வாள். எங்கு அழைத்தாலும் பிகு செய்யாமல் வந்திடுவாள்

நான் அவளோடு சுற்றியதில்லை காதல் கடிதம் தந்திருக்கிறேன். மறுநாள் காலை எனை
அழைத்து கடிதம் நன்றாக வந்திருப்பதாகவும் தொடர்ந்து எழுதித்தருமாறும் கூறினாள்

பிறகவள் என்ன ஆனாள் என்று யாருக்கும் தெரியாது
கல்லூரி விரிவுரையாளருடன் ஓடிப்போனதாகவும், மேற்படிப்பிற்கு லண்டன் சென்றதாகவும் 
ஒரு பேச்சு இருந்தது. சிலர் கூறினர்.
அவள் பாலிவுட்டில் நடிக்க முயற்சிக்கிறாளென, சிலர் கூறினர்

மார்பகப் புற்றுநோயுடன் கடற்கரை சிற்றூர் ஒன்றில் ஒண்டியாய் வசித்து வருகிறாளென.
நேற்று, முன்னால் -மாணவர்- கூடுகைக்கு வந்திருந்த அவளைக் கண்டபோது நான் 
நினைத்தேன் “ஒருவேளை எல்லா வதந்திகளும் உண்மையாக இருக்குமோ” தவிர இப்போது அவள் கிடையாது
வகுப்பிலேயே மிக அழகான பெண்.

ரெட்டைப் பின்னலிட்டு சீருடை அணிந்தே வந்திருக்காலம்; பொருத்தமற்ற 
சிங்காரமும் மிகையான உடல் மொழியும் 
முடிகொட்டி முடித்த நண்பன் கூறினான் “அவள் ஏன் அலுப்பூட்டும் மேஜிக் ஷோவை 
அரங்கேற்றுகிறாள்” 

கூலர்ஸும் குழந்தைகளுமாய் வந்திருந்த சக மாணவிகள் கண்டு கொள்ளவே இல்லை.
மேஜை மேல் நிற்பதைப் போல, நின்ற படியே மே ஐ கம் இன் கேட்பவளைப் போல 
காட்சியளித்தவள் சொல்லிக்கொள்ளாது கிளம்பி விட்டாள் இடையிலேயே.
பள்ளியில் இருந்து ரயில்நிலையம் செல்லும் பாதையில் அவள் ஒரு சரக்கு லாரியை வாயில் கட்டி இழுத்து நடந்ததை
என் வாழ்நாளில் மறக்க முடியாது.

தொகுப்பு : வால்
கவிஞர் : சபரிநாதன்

—————————————————


பட்டை அணிந்த பாய்லர் ஸ்தலம்

இந்த கண்ணன் மீதான வன்மம்தான்
அவன் மீதும் படர்கிறதோ என்னவோ

பெருமாள் ஒன்றும் நேரடி எதிரி இல்லைதான்

இருந்தும் 
அவனது வலது ஆட்காட்டி விரலிலிருந்து
சக்கரத்தைப் பறித்துக் கொண்டு
உளுந்த வடையொன்றைச் செருகிவைத்தேன்
மறுமுறை திருட்டு வி.சி.டி ஒன்றை

சம்ஹார ஆயுதமிழந்த அவன்
தாளாக் கோபத்தில்
என் பொருட்டே
தன் சங்கை ஊதுகிறார்

மதுரை சிவத்தலம்
உனக்கென்ன ஜோலியென்று
கடுப்பேற்றி விரட்டலாம்தான்
மீனாட்சியைத் தங்கையெனச் சொல்லியே 
தப்பித்து வருகிறான்

இரவிலும் தேநீர் போஷித்த
 பாய்லர் நகரம் இது

பாய்லர் என்பது பாய்லரா என்ன


அது ஒரு செம்புலிங்கம்
என்பெருமான் சொரூபம்

அருகி வரும் பாய்லர்
குறியீட்டளவில் 
சைவத்தின் வீழ்ச்சி
அல்லது 
வைணவ எழுச்சி


பைத்தியக்காரா என்று நீங்கள் 
என்னை மறுதலிக்கலாம்

நாமம் சாத்திய 
ஒரேயொரு வைணவ பாய்லரைக்
காட்டுங்கள் போதும்

அம்மையும்
நானும் வெளியேறிக் கொள்கிறோம்.


கவிஞர் : லிபி

Comments

Popular posts from this blog

மாரிராஜ் இந்திரன் தேர்வுசெய்த கதை-1

கட்டுரைகள்