வேணு வேட்ராயன் தெரிவுசெய்த கவிதைகள்
1
இன்பமும் துன்பமும்
இன்ப துன்பங்கள் கடந்த
விழிப்பு நிலையும்தான்
வாழ்க்கை எனில்
அவற்றின் மர்மம்- அதாவது வாழ்க்கையின் மர்மம்-
வாழ்க்கையில் இல்லாமல்
நூல்களிலும்
அறிஞர்களிடமும்
ஞானிகளிடமுமா
இருக்கக்கூடும்?
எப்போது
எங்கிருந்து பொங்கி வருகிறது
அந்த அரிய மனவெழுச்சி
என்பதை அறி.
பற்றிக்கொள் அதனை.
பிறிதெதுவுமே வேண்டியதில்லை
பிரிதெல்லாவற்றையுமே நாம் அறிவதற்கு.
பொங்குமோர் மனவெழுச்சியால்
உள்நின்றெழுந்த
இசையாலும் கவிதையாலும், மெய்யுணர்வாலும்
நாம் அடைவதெல்லாம்,
கிட்டுவதுண்டோ
உளச்சோர்வினால்
உள்நின்றொழுகிய
பூஜைகளாலும் சிலைகளாலும்
பக்திப் பாவனைகளாலும் நம்பிக்கைகளாலும்
கலைகள் என்றும் இலக்கியங்கள் என்றும்
தத்துவங்கள் என்றும் படைக்கப்பட்டுவிட்ட
இசையாலும் கவிதையாலும் மெய்யுணர்வாலும்?
ஓ, புத்த!
நீர் பிறந்து வளர்ந்த நாட்டின் பழம்நெறிகளை
அறம் என்று ஏற்றுக்கொள்ள முடியாமல்,
புறம் தள்ளிய நும் விழிப்புக்கனல் வண்ணத்தால்
தீட்டப்பட்டுவிட்ட ஓர் அமைதிப் பெருந்திரளும்
சுட்டப்படும் இயற்கைப் பெருவெளியுமே
இவ்வுலகமாய் காட்சி தருவதெப்போது?
எல்லாவற்றையும் எவ்வளவு நன்றாய்
வெளிப்படுத்தியாகிவிட்டது!
------ தேவதேவன்
2
காமங் காம மென்ப காமம்
அணங்கும் பிணியு மன்றே நினைப்பின்
முதைச்சுவற் கலித்த முற்றா விளம்புல்
மூதா தைவந் தாங்கு
விருந்தே காமம் பெருந்தோ ளோயே
காமங் காம மென்ப காமம்
அணங்கும் பிணியு மன்றே நுணங்கிக்
கடுத்தலுந் தணிதலு மின்றே யானை
குளகுமென் றாண்மதம் போலப்
பாணியு முடத்தது காணுநர்ப் பெறினே
------மிளைப்பெருங் கந்தன்
3
செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
செங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக்
கழறொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே
-----திப்புத் தோளார்
4
பூவிடைப் படினும் யாண்டுகழிந் தன்ன
நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவரி தாகிய தண்டாக் காமமொ
டுடனுயிர் போகுக தில்ல கடனறிந்
திருவே மாகிய வுலகத்
தொருவே மாகிய புன்மைநா முயற்கே
------சிறைக்குடியாந்தையார்
5
பைங்காற் கொக்கின் புன்புறத் தன்ன
குண்டுநீ ராம்பலுங் கூம்பின வினியே
வந்தன்று வாழியோ மாலை
ஒருதா னன்றே கங்குலு முடைத்தே
-----ஓரம்போகியார்
6
கொன்னூர் துஞ்சினும் யாந்துஞ் சலமே
எம்மி லயல தேழி லும்பர்
மயிலடி யிலைய மாக்குர னொச்சி
அணிமிகு மென்கொம் பூழ்த்த
மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே
---கொல்லன் அழிசி
7
பேச்சு
கேள், அழகு கதைக்கிறது:
பச்சைச் சதையுதடு
ரத்தப் பளபளப்பு.
கண்ணின் இமைக்கரங்கள்
மெல்ல அருகழைக்கும்.
பார்வைச் செவிப்பறையில்
பருவம் முரசறையும்.
பூவின் இதழ்ச் சுவருள்
வண்டுக்குரல் ஒலிகள்
மோதி மடிகிறது.
முத்தத்திரை மறைவில்
பேச்சுப் புதைகிறது.
ஆனால், ரத்தம் கதைக்கிறது
மவுனம் அதிர்கிறது.
-----பிரமிள்
8
மழையின்
பெரிய புத்தகத்தை
யார் பிரித்துப்
படித்துக் கொண்டிருக்கிறார்கள்
படிக்கட்டில்
நீர்
வழிந்து கொண்டிருக்கிறது.
-தேவதச்சன்
என் பிறப்புறுப்பு
புறங்களில் வீசி
அடித்தவண்ணம் இருக்கிறது
வாழ்வின் மணிச்சுவரில்
தொட்டு ஒலி ஓடுகிறது.
பயிர்போலன்றி
வரப்புக்கு வெளியேயும்
வாழும் கொக்குகள்
தோன்றின
ஓடும் சமுத்திரம்
எங்கெங்கோ மோதி
காணாமல் போனது அலை
நீர் பள்ளத்தில்
தொலையாதிருக்கிறது.
---தேவதச்சன்
Comments
Post a Comment