வே.நி.சூர்யா தேர்வுசெய்த கவிதைகள்
1. ஒலிக்கிடங்கு மைதானம்
1
இருந்தவொரு கால்பந்தும்
தொலைந்துவிட்ட மைதானத்தின் புதருக்குள்
அவனுக்கு மட்டும்
மனித சிரமொன்று தட்டுப்பட
மற்றவர்களையும் அழைத்துக் காண்பித்தான்
அவர்களோ
பந்து கிடைத்துவிட்டதென கூச்சலிட
இதுபோலான பந்துகள்
சந்தைக்கு மிகவும் புதிது என்பதால்
அதை வைத்தே
விளையாட்டைத் தொடர முடிவுசெய்தனர்
அச்சிரத்தை வாங்கி
சுற்றிப் பார்த்த அணித்தலைவன்
பக்கவாட்டிலிருக்கும் ஆழ்துளைக் கிணற்றைப் பார்த்து
சூதானமாக ஆடவேண்டுமென
அணியினருக்கு எச்சரித்தான்
எந்தப்பக்கமும் திரும்பவோ சுழலவோ இயலும் அக்கண்களை
புதைப்பதற்கு முன்பே மூடிவிட்டதால்
துவக்கத்தில் சாதா பந்துக்களைப்போல
சம்மந்தமேயில்லாத இடங்களில் போய்விழுவதும்
பின்பு உரசிப்பார்த்து உதை வாங்கியபடி
சரியான இடத்திற்குப் போவதுமாயிருந்தாலும்
சளித்தொல்லையால் மூக்கடைத்து
மூச்சுவிடத்திணறினாலும்
தும்மியபடியே வானுக்கும் காலுக்கும் பறந்துகொண்டிருந்தது
2
பறந்துவரும் பந்தை இவன்
எதிர்நோக்கும் விதத்தைப்பார்த்தால்
ஏதோ தன் சிரத்திற்கு பதிலாக
அதைத்தான் அணிந்துகொள்ளப் போகிறானோவென
நமக்குத் தோன்றலாம்
இத்தனை களேபரங்களுக்கிடையேயும்
இம்மைதானத்தில் இவர்கள்
ஒவ்வொரு முறையும் உயர எத்துகையில்
அச்சிரத்திற்கு
தான் உடலோடு இணைந்திருந்தபோது
அடிக்கடி வரும் தலைவலியில்
யாரோ தன்தலையை ஓங்கி உதைப்பதைப் போலிருக்கிறதெனக்
கூறிக்கொண்டது
நினைவுக்கு வந்து வந்து போகிறது
-பெரு.விஷ்ணுகுமார் (ழ என்ற பாதையில்
நடப்பவன், மணல்வீடு வெளியீடு)
•••
2.ஒளிரும் பல்பு
அறையில் பிரகாசமாய் எரிகின்றது தொங்கும் ஒளிர் பல்பு. தன் விரல்களை பின்னிப்பின்னி
சுவரின் மீது நிழல்களை உண்டுபண்ணி நகரச்செய்கிறான் ஒருவன்;
அவன் சொல்கின்றான் "இது ஒரு மான்"
குழந்தைகள் கூச்சல்போடுகின்றன "ஹைய்யா"
"இப்போது ஒரு புலியை வர வை "
"இது ஒரு புலி"
"ஹைய்யா"
"இது ஒரு ஆனை, ஒரு மான், ஒரு காட்டுப்பன்றி, ஒரு மந்தி
..."
ஒளிரும் பல்பு தன்னை நிறுத்திக்கொள்ள விரும்புகின்றது. கானகத்தின் மத்திமத்தில்
தான் இருப்பதாய் உணர்கின்றது. மேலும் மிருகங்களின் அமளிச்சப்தங்களையும் கேட்கின்றது.
திடுமென அது உணர்கின்றது தன்னை அந்நியமாகவும் கண்டுகொள்ளாமல் விடப்படதாகவும்.
-சப்பார்டி ஜோக்கோ தமோனோ (Contemporary Indonesian poetry:
Anthology)
•••
3. Mr. இடியட்
மைதானத்தில் இடதுகோடியில் நிற்கும்
அந்த ஆட்டக்காரனைக் கவனியுங்கள்
சற்றும் பொறுப்பற்ற அளுங்குணி ஆட்டம் ஒன்றை
எவ்வளவு ஆர்வமாக ஆடிக்கொண்டிருக்கிறான்
எப்போதும் பந்தை எதிரிகளுக்குச் சாதகமாகவே
நகர்த்திச்செல்கிறான்
பெரும்பாலும் பந்திற்கு
எதிர்த்திசையிலேயே ஓடிக்கொண்டிருக்கிறான்
மைதானத்திற்குள் எதையெல்லாம் செய்யக்கூடாதோ
அதை மட்டுமே செய்கிறான்
ஆட்டத்தின் விதிகள் ஏதொன்றையும்
மதியாமல் ஆடும் அவனை
பீதியோடும் ஆச்சர்யத்தோடும் ஏளனத்தோடும்
பார்க்கிறார்கள் சக ஆட்டக்காரர்கள்
விவரணையாளர்கள் அவன் செய்கையின்
காரணத்தைப் புரியாது திகைத்திருக்க
நடுவர்கள் அவனை மைதானத்தை விட்டு
வெளியேறச் சொல்லி பலமுறை ஆணையிட்டும்
எதற்காக ஆடிக்கொண்டிருக்கிறான்
ஒரு கோமாளியைப் போல
- இளங்கோ கிருஷ்ணன் (காயச்சண்டிகை, காலச்சுவடு வெளியீடு)
Comments
Post a Comment